Enable Javscript for better performance
கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் விபத்து: 18 வீரர்கள் உயிரிழப்பு?- Dinamani

சுடச்சுட

    

    கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் விபத்து: 18 வீரர்கள் உயிரிழப்பு?

    By dn  |   Published on : 15th August 2013 04:32 AM  |   அ+அ அ-   |    |  

    மும்பை கடற்படைத் தளத்தில், இந்திய கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட வெடிவிபத்து காரணமாக 18 வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    மும்பை கொலாபா பகுதியில் உள்ள இந்தியக் கடற்படைத் தளத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இரு நீர்மூழ்கிக் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றில், ஐ.என்.எஸ். சிந்துரக்ஷக் என்ற ரஷிய தயாரிப்பு நீர்மூழ்கிக் கப்பலில் நள்ளிரவில் திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது.

    முதலில் சிறிய அளவிலான வெடிப்பும், அதைத் தொடர்ந்து பெரிய அளவிலான இரு வெடிப்புகளும் அடுத்தடுத்து நிகழ்ந்தன. இதனால் நீர்மூழ்கிக் கப்பல் தீப்பிடித்து, மூழ்கத் தொடங்கியது. அப்போது அக்கப்பலில் 18 கடற்படை வீரர்கள் இருந்தனர். அவர்களில் சிலர் விபத்தைத் தொடர்ந்து கடலில் குதித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் இருக்குமிடம் குறித்து இதுவரை தகவல் தெரிய வரவில்லை.

    2300 டன் கிலோ வகையைச் சேர்ந்த ஐ.என்.எஸ். சிந்துரக்ஷக் நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட வெடிவிபத்தின் சப்தம் கடற்படைத் தளத்தில் இருந்து 2 கி.மீ. தூரம் வரை கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெடிவிபத்தைத் தொடர்ந்து கப்பலில் இருந்து தீப்பந்துகள் எழுவதை சிலர் செல்போன் மூலம் படம் பிடித்த காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.

    ரஷியாவில் உருவாக்கப்பட்டு, அந்நாட்டுக் கடற்படையில் சிறிது காலம் பயன்படுத்தப்பட்ட பின் இந்தியாவுக்கு விற்கப்பட்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல் டீசல் ஜெனரேட்டர்கள் மற்றும் மின்சார பேட்டரிகளால் இயக்கப்பட்டு வந்தது. இதில் எதிரிநாட்டுக் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்கக்கூடிய கிளப் ரக ஏவுகணைகள் உள்பட பல்வேறு ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருந்தன.

    முன்னதாக, இந்த விபத்து குறித்து மும்பை தீயணைப்புத் துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து, சிந்துரக்ஷக் நீர்மூழ்கிக் கப்பலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு நீர்மூழ்கிக் கப்பலில் தீப்பிடிக்காமல் தடுக்க நீரைப் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, அந்த நீர்மூழ்கிக் கப்பல் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இத்தகவலை மும்பை துணை தீயாணைப்பு அதிகாரி பி.எஸ்.ரஹன்டாலே தெரிவித்தார்.

    இதனிடையே, ஐ.என்.எஸ். சிந்துரக்ஷக் நீர்மூழ்கிக் கப்பல் விபத்து குறித்து தகவல் அறிந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி, இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விளக்கினார். அவர் பின்னர் மும்பை சென்று விபத்து நடந்த பகுதியை நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.கே.அந்தோனி, ""அதிர்ச்சிகரமான இந்த துயரச் சம்பத்தில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்கும், கடற்படைக்கும் அனுதாபம் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்'' என்று தெரிவித்தார். அதன் பின் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

    அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களின் கேள்விகள் அனைத்துக்கும் கடற்படைத் தளபதி ஜோஷி பதிலளித்தார். அவரிடம், விபத்து நடந்து 17 மணிநேரம் கடந்த பிறகும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த வீரர்கள் குறித்து தகவல் கிடைக்காதது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்து ஜோஷி கூறியது:

    அதிசயங்கள் நிகழ வாய்ப்புள்ளது. வீரர்கள் ஆபத்துக் காலத்தில் உயிர்தப்பிச் செல்வதற்காக நீர்மூழ்கிக் கப்பல்களில் காற்றுப்பைகள் வைக்கப்பட்டிருக்கும். எனினும், விபத்து நடந்த பின் வெகுநேரம் கடந்து விட்டதையும் அறிந்துள்ளோம்.

    இவ்விபத்தின் பின்னணியில் சதிச்செயல் இருந்திருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், சதி நடந்ததற்கான அறிகுறி எதுவும் இதுவரை தென்படவில்லை.

    நீர்மூழ்கிக் கப்பலின் மேற்பகுதியில் இருந்த மற்ற 3 வீரர்கள் விபத்துக்குப் பிறகு கடலில் குதித்து உயிர் தப்பினர். எனினும் அவர்கள் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. நடந்தது என்ன என்பது குறித்துக் கூறும் நிலையில் இப்போது அவர்கள் இல்லை.

    வெடிவிபத்துக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தனது அறிக்கையை 4 வாரங்களில் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடற்படையின் நீச்சல் வீரர்கள் விபத்துக்குள்ளான நீர்மூழ்கிக் கப்பலை அறுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். காணாமல் போன வீரர்களைத் தேடும் பணியில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இதுவரை அவர்களின் முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றார் ஜோஷி.

    சிந்துரக்ஷக் கடந்து வந்த பாதை....

    விபத்துக்குள்ளான ஐ.என்.எஸ். சிந்துரக்ஷக் நீர்மூழ்கிக் கப்பல், ரஷியாவிடம் இருந்து ரூ.400 கோடிக்கு வாங்கப்பட்டது. ரஷியாவில் ரூ.450 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட இக்கப்பல் கடந்த 1997இல் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது.

    இந்த நீர்மூழ்கிக் கப்பலில் கடந்த 2010ஆம் ஆண்டு பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில், ஒரு கடற்படை வீரர் உயிரிழந்தார். 2 பேர் காயமடைந்தனர். அந்த விபத்து, கப்பலின் பேட்டரியில் ஏற்பட்ட வெடிப்பால் ஏற்பட்டது.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp