அப்சல் குருவை தூக்கிலிட்டதற்கு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம்

பயங்கரவாதி முகமது அப்சல் குருவைத் தூக்கிலிட்டதற்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
அப்சல் குருவை தூக்கிலிட்டதற்கு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம்

பயங்கரவாதி முகமது அப்சல் குருவைத் தூக்கிலிட்டதற்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம், குடியரசுத் தலைவர், மத்திய அரசு ஆகியவற்றின் உத்தரவின்படி நிறைவேற்றுப்பட்டுள்ள தண்டனைக்கு மாநில முதல்வர் ஒருவர் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது அரசியல்ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரோத மனப்பான்மை உருவாகும்: இது தொடர்பாக ஒமர் அப்துல்லா ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பது: நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இது போன்ற நடவடிக்கைகள் காஷ்மீர் பகுதி இளைஞர்கள் தங்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ளவும், விரோத மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளவும் வாய்ப்பு அளித்துவிடும். அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவே அவர்களால் கருதப்படுகிறது. இதனால் பெரும்பான்மையான காஷ்மீர் இளைஞர்கள் தவறான வழியில் சென்று விடவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

எப்போதுமே நாம்தான் பாதிக்கப்படும் மக்கள் என்ற எண்ணமும், தங்களுக்கு நீதி கிடைக்காது என்ற அவநம்பிக்கையும் காஷ்மீர் மக்களிடம் உருவாக அனுமதித்து விடக் கூடாது என்பதற்காகவே நான் இப்போது சில கருத்துகளைக் கூறுகிறேன் என்றார்.

அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய அவர், "அப்சல் குருவை தூக்கிலிடும் முன்பு அவரது குடும்பத்தினரை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்காதது துரதிருஷ்டவசமானது. இந்த விஷயத்தில் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட வேண்டியுள்ளது' என்றார்.

தான் மரண தண்டனைக்கு எதிரானவன் என்று உறுதிபடப் பேசிய ஒமர், "எனக்கு ரத்தவெறி ஏதும் இல்லை' என்றார்.

காஷ்மீர் மக்களின் கருத்து: மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பலரில் அப்சல் குருவை மட்டும் தேர்வு செய்து மத்திய அரசு தண்டனை வழங்கியுள்ளதாகக் கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு, "இது தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்ட தண்டனை அல்ல என்பதை காஷ்மீர் மக்களுக்கும் உலகுக்கும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அவருக்கு சீக்கிரமாகவே தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதுதான் எனது கருத்து.

இந்த தலைமுறை காஷ்மீர் மக்கள் தங்களை அப்சல் குருவின் அங்கமாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது. அவர் மீதான விசாரணை சரியாக நடத்தப்படவில்லை என்பதே காஷ்மீர் மக்களின் கருத்தாக உள்ளது. இதே கருத்துதான் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எழுந்துள்ளது.

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள்? இந்திய ஜனநாயகத்தின் அடையாளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று அப்சல் குரு தொடர்புடைய நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு கருதப்படுகிறது.

முன்னாள் பிரதமர் என்பவர் ஜனநாயகத்தின் அடையாளம் இல்லையா? பஞ்சாப் முதல்வர் தனது அலுவலகத்திலேயே படுகொலை செய்யப்பட்டார். அவர் ஜனநாயகத்தின் அடையாளம் இல்லையா? என்று ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் குற்றவாளிகளுக்கும், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பேயந்த் சிங் கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளது குறித்து அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

"நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் வார்த்தைகளை விளக்குவது மிகவும் கடினம். ஒருமித்த அளவில் மக்களின் மனவோட்டத்தில் திருப்தி அடைவதன் மூலம் ஒருவரைத் தூக்கிலிட்டு விட முடியாது. சட்டப்படியும், நீதிப்படியும் அத்தண்டனை வழங்குவதற்கான காரணங்கள் அனைத்தும் வலுவாக இருக்க வேண்டும்.

நிறைவேற்றி இருக்கக் கூடாது: மரண தண்டனைக்காக காத்திருப்பவர்கள் குறித்தும், இதுவரை மரண தண்டனை பெற்றவர்கள் குறித்தும் வேறுவிதமான கேள்விகளை எழுப்ப நான் விரும்பவில்லை. அதே நேரத்தில் அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தண்டனை அரசியல் நோக்கம் கொண்டது என்ற குற்றச்சாட்டில் இருந்து மத்திய அரசு தன்னை காத்துக் கொள்ள வேண்டும். இது சட்டப்படியே எல்லாம் நடந்துள்ள என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த தண்டனை நிறைவேற்றப்படாமல் இருத்திருக்க வேண்டுமென்பதுதான் எங்கள் கட்சியின் கருத்து என்றார். இந்த விவகாரத்தை முன்வைத்து மத்திய அரசில் இருந்து விலகுவீர்களா என்ற கேள்விக்கு, "நாங்கள் விலகினால் அப்சல் குருவை மீண்டும் கொண்டு வர முடியும் என்றால் அரசில் இருந்து வெளியேறுவோம்' என்று ஒமர் அப்துல்லா பதிலளித்தார்.

காஷ்மீரில் 2ஆவது நாளாக ஊரடங்கு

ஸ்ரீநகர், பிப். 10:÷நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தொடர்புடைய பயங்கரவாதி அப்சல் குருவுக்கு சனிக்கிழமை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது.

சனிக்கிழமை ஊரடங்கு உத்தரவையும் மீறி காஷ்மீரில் பல இடங்களில் சில அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் 36 போராட்டக்காரர்களுக்கும், 23 போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போராட்டம் பரவுவதைத் தடுக்க மாநிலம் முழுவதும் செல்போன், இன்டர்நெட் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. செய்தி தொலைக்காட்சி சேனல்களை ஒளிபரப்புவதை கேபிள் ஆபரேட்டர்கள் தவிர்த்து விட்டனர்.

மோதலில் ஒருவர் சாவு: 6 பேர் படுகாயம்

ஸ்ரீநகர், பிப். 10: அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது பாதுகாப்புப்படை மேற்கொண்ட நடவடிக்கையில் ஒருவர் உயிரிழந்தார். 6 பேர் காயம் அடைந்தனர்.

இது பற்றி அதிகாரவட்டாரங்கள் தெரிவித்ததாவது: மத்திய காஷ்மீர் பகுதியில் உள்ள கந்தர்பால் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை பாதுகாப்புப்படையினர் விரட்டியபோது தாரிக் அகமது பட் மற்றும் மேலும் 2 பேர் ஆற்றில் குதித்தனர். இதில் பட் உயிரிழந்தார் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். ஆனால் போலீஸார் இந்த தகவலை மறுத்தனர். படகில் சென்றபோது அது கவிழ்ந்ததில் ஒருவர் நீந்தி கரைசேர்ந்தார். மற்றொருவரை சிலர் காப்பாற்றினர். தாரிக் அகமது பட்டை காப்பாற்ற இயலவில்லை. அவரது சடலம் மீட்கப்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர். இதனிடையே, அவரது சாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிதாக அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்நிலையில் பாரமுல்லா மாவட்டம் வாட்டர்காம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி இளைஞர்கள் சிலர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். அப்போது அவர்களை கலைந்துபோகச் செய்த பாதுகாப்புப் படையினருடன் இளைஞர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.

வீட்டுக் காவலில் கிலானி?

அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ஜாகீர் ஹுசேன் கல்லூரியில் பேராசிரியராக உள்ள எஸ்.ஏ.ஆர். கிலானியை போலீஸார் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கிலானியை அதே ஆண்டு டிசம்பரில் தில்லி போலீஸார் கைது செய்தனர்.

எனினும், கிலானி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகவில்லை என்று 2003-ல் உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை காலையில் விசாரணைக்காக நியூ பிரெண்ட்ஸ் காலனியில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு கிலானியை போலீஸார் அழைத்துச் சென்றனர். அன்றைய தினம் இரவு 10 மணியளவில் அவர் விடுவிக்கப்பட்டார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை முதல் கிலானியின் வீட்டைச் சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வீட்டில் இருந்து வெளியே செல்லவும் அவரை போலீஸார் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தில்லியில் வசித்து வரும் ஹுரியத் தலைவர்கள் சையத் அலி கிலானி, மிர்வைஸ் உமர் ஃபரூக், பத்திரிகையாளர் இஃப்திகர் கிலானி ஆகியோரின் வீட்டு வாயிலில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com