சுடச்சுட

  
  YasinMal

  ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக்கின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய இந்தியா முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

  பாகிஸ்தான் சென்றுள்ள யாசின் மாலிக், அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் நிகழ்ச்சியில், மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கிய மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துடன் ஒரே மேடையில் பங்கேற்றார்.

  இது குறித்து விசாரணை நடத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது. அவரின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது.

  இந்தியாவுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளில் மாலிக் ஈடுபட்டுள்ளார். ஹபீஸ் சயீத் மற்றும் இந்தியாவின் நலனுக்கு விரோதமாகச் செயல்படும் தலைவர்களை அவர் சந்தித்துள்ளார். அவர் இந்தியா திரும்பியதும் அவரிடம் பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தவுள்ளனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  மத்திய உள்துறை இணையமைச்சர் ஆர்.பி.என். சிங் இது குறித்து செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

  முழு விசாரணை நடத்தப்படுகிறது. அதன் அறிக்கை வந்ததும், மாலிக் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

  வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியது: பாதுகாப்பு அமைப்புகள் கொடுத்த தடையின்மைச் சான்றிதழின் அடிப்படையில்தான் அவருக்கு பாஸ்போர்ட் அளிக்கப்பட்டது. அந்த பாஸ்போர்ட்டை திரும்பப் பெறும்படியோ, பறிமுதல் செய்யும்படியோ அறிக்கை அளிக்கப்பட்டால், அதன் மீது கவனத்துடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

  பாஜக வலியுறுத்தல்: பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் இது குறித்துக் கூறியதாவது: அரசு இது குறித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாத வகையில், பாகிஸ்தானுடன் பேச வேண்டும். இது போன்றவர்களின் நடவடிக்கைகள் தொடர் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட வேண்டும் என்றார்.

  பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறியது: அவர்களைக் கைது, அவர்களின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய வேண்டும். மாலிக் பாகிஸ்தான் செல்ல இந்தியா ஏன் அனுமதித்தது? அரசு இதற்கு விளக்கம் சொல்ல வேண்டும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai