சுடச்சுட

  
  leaders

  "இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மீது சர்வதேச விசாரணை நடத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்த வேண்டும்'' என்று மாநிலங்களவையில் புதன்கிழமை அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தினர்.

  இலங்கையில் போருக்குப் பின்பு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் துயரம் குறித்து விவாதிக்கும் கவன ஈர்ப்புத் தீர்மானத்தை அதிமுக உறுப்பினர் டாக்டர் வா. மைத்ரேயன் மாநிலங்களவையில் கொண்டு வந்தார்.

  அதற்கு மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரி அனுமதி அளித்ததையடுத்து, விவாதத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் பேசியதாவது:

  டாக்டர் வா. மைத்ரேயன் (அதிமுக): இலங்கை போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா. மன்றத்தில் முறையிட்டு, குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என தமிழக சட்டப் பேரவையில் 2011-ம் ஆண்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை மத்திய அரசு மதிக்கத் தவறியது.

  அதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் கோபம் பல வழிகளில் வெளிப்பட்டது. அதனால், கடந்த ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்தது.

  போருக்கு பின்பு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்கள குடியேற்றங்கள் அதிகமாக உள்ளன. தமிழர்களின் வரலாறு, தொல்லியல் ஆதாரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

  இவ்வாறு ஓர் இனத்தை திட்டமிட்டு அழித்துவரும் இலங்கையை நட்பு நாடு என மத்திய அரசு போற்றி வருகிறது.

  எங்களைப் பொறுத்தவரை, இந்தியத் தமிழர்களின் தொப்புள்கொடி உறவான இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை இலங்கையை நட்பு நாடாகக் கருத மாட்டோம்; அதை எதிரி நாடாகவே கருதுவோம்.

  திருச்சி சிவா (திமுக): இலங்கையின் சுதந்திர தினத்தில் அந்த நாட்டு அதிபர் மகிந்த ராஜபட்ச, தமிழர்களுக்கு ஆட்சிப் பகிர்வு அளிக்க வகை செய்யும் இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் 13-வது திருத்தத்தைச் செயல்படுத்த வழியில்லை என்று அறிவித்துள்ளார்.

  ஆனால், அதன் பிறகும் அந்த சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற இலங்கையை இந்தியா வலியுறுத்தும் என வெளியுறவு அமைச்சர் மாநிலங்களவையில் பேசுகிறார்.

  விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் என்பதற்காக 12 வயது பாலசந்திரனை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.  இலங்கைத் தமிழ்ப் பெண்கள் இழக்கக்கூடாததை எல்லாம் இழந்து விட்டனர். குழந்தைகள் மடிந்துள்ளனர். இவை எல்லாம் மனித உரிமை மீறல் இல்லையா?

  இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் இந்தியா முதலில் கொண்டு வந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு மத்திய அரசு தவறி விட்டது.

  அதனால், இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தையாவது இந்தியா ஆதரிக்க வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை அந்த நாட்டு அதிபரை இந்தியாவுக்கு வர அனுமதிக்கக்கூடாது.

  டி. ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்): இலங்கையில் போர் நடைபெற்ற பகுதிகளில் சீனா வடிவமைத்த சாலைகளையும், இந்தியா கட்டிக்கொடுத்த வீடுகளையும் காட்டிவிட்டால், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வும் சம உரிமையும் கிடைத்து விட்டதாகக் கருத முடியுமா?

  ஜெனீவா கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள வரைவுத் தீர்மானம் குறித்து அந்த நாட்டுடன் பேசி இலங்கை தீர்வு காண வேண்டும் என இந்தியா யோசனை தெரிவிப்பது எந்த வகையில் நியாயமாகும்?

  இலங்கைப் போர்க் குற்றங்கள் மீது பாரபட்சம் இல்லாத சர்வதேச அமைப்பு மூலம் விசாரணை நடத்த இந்தியா வலியுறுத்த வேண்டும்.

  வெங்கய்ய நாயுடு (பாஜக): இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை அழிக்கும் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதற்கு காரணமான குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.

  இலங்கை விவகாரத்தில் மற்ற அரசியல் கட்சிகளின் நிலைப்பாடும், பாரதிய ஜனதா கட்சியின் நிலையும் வேறு.

  நட்பு நாடான இலங்கையுடன் திடீரென உறவை துண்டித்துவிட முடியாது. அதே சமயம், அந்த நாட்டில் மனித உரிமைகள் மீறப்படும்போது அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது இந்தியாவின் கடமை.

  பாலசந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட புகைப்படங்கள் போலியானவை என இலங்கை அரசு கூறுகிறது. அவை போலி என்றால் நடந்தது என்ன என்பதை அந்த நாடுதான் விளக்க வேண்டும்.

  டி.கே. ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): இலங்கைத் தமிழருக்கு அரசியல் உரிமை வழங்க பல ஆண்டுகளுக்கு முன்பு ராஜீவ் காந்தி- ஜெயவர்த்தன உடன்பாடு மேற்கொள்ளப்பட்டது. அதை அந்த நாடு செயல்படுத்தவில்லை.

  ராஜதந்திர முறையில் இலங்கைக்கு நெருக்குதல் கொடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.கே. ரங்கராஜன் கூறினார்.

  இந்த விவாதத்தில் சஞ்சய் ரௌத் (சிவசேனை), டி. பந்தோபாத்யாய (திரிணமூல் காங்கிரஸ்), எம். ரமேஷ் (தெலுங்கு தேசம்), நரேஷ் அகர்வால் (சமாஜவாதி கட்சி), ராம்விலாஸ் பாஸ்வான் (லோக் ஜனசக்தி), சிவானந்த திவாரி (ஐக்கிய ஜனதா தளம்), தருண் விஜய் (பாஜக), ராம் கிரிபால் யாதவ் (ராஷ்டிரீய ஜனதா தளம்) ஆகியோரும் பேசினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai