Enable Javscript for better performance
கச்சத் தீவை மீட்கக் கோரி கருணாநிதி மனு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    கச்சத் தீவை மீட்கக் கோரி கருணாநிதி மனு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

    By dn  |   Published on : 16th July 2013 04:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    supremcourt

    இந்தியா-இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட கச்சத் தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து, அந்தத் தீவை மீட்க வேண்டும் என்று திமுக தலைவர் மு. கருணாநிதி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசும், தமிழக அரசும் நான்கு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

     தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர், இப்ராஹிம் கலிஃபுல்லா, விக்ரம்ஜித் சென் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் கருணாநிதியின் மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

    அப்போது, "கருணாநிதியின் மனு குறித்து மத்திய அமைச்சரவைச் செயலர், வெளியுறவுச் செயலர், தமிழக அரசின் தலைமைச் செயலர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும்' என்று உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை தேதி குறிப்பிடாமல் தலைமை நீதிபதி தள்ளிவைத்தார்.

    கருணாநிதி சார்பில் மூத்த வழக்குரைஞர் வி.ஜி. பிரகாசம், ஆர். விடுதலை ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மே 10-ஆம் தேதி தாக்கல் செய்த மனுவின் விவரம்:

    இந்தியா-இலங்கை இடையே கச்சத் தீவு தொடர்பாக 1974 ஜூன் 26, 28 தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும்  அந்த ஒப்பந்தம் செல்லாது எனவும் அறிவிக்க மத்திய அமைச்சரவைச் செயலருக்கு உத்தரவிட வேண்டும்.

    பாக் ஜலசந்தி பகுதி மற்றும் கச்சத் தீவு பகுதியில் மீன் பிடித்து வந்த இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமையை மீட்க வேண்டும்.

    தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர்.

    இந்திய மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதால், இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளான தமிழக மீனவர்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

    தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க, இந்திய கடலோர காவல் படைக்கு  உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    பின்னணி: கச்சத்தீவு ஒப்பந்தம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று 2008-இல் அதிமுக பொதுச் செயலாளரும், தற்போதைய தமிழக முதல்வருமான ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது.

    கச்சத் தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மே 3-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து, கருணாநிதி தாக்கல் செய்த மனு தற்போது விசாரணைக்கு வந்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai