இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு கூடுதலாக கடன் வழங்குவது சிரமம் என ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது. தங்களுடைய முதலீட்டுக்கான வட்டி வருமானம் குறைவாக இருப்பதே இதறக்குக் கார ணம் என இவ்வங்கி தெரிவித்துள்ளது.
இவ்வங்கியின் தலைவராக கடந்த மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட டகெஹிகோ நகாவோ, நொய்டாவில் வியாழக்கிழமை முதன்முதலாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் வழங்கும் அளவு ரூ.32,000 கோடியிலிருந்து ரூ.54,000 ஆயிரம் கோடியாக அதிகரித்து உள்ளது.
எனினும், வரும் காலத்தில் இந்த அளவைவிட கூடுதலாக கடன் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால், முந்தைய காலத்தைவிட குறைவான அளவுக்கே கடன் கொடுக்க வாய்ப்பு உள்ளது.
முதலீடு செய்யப்படும் உபரி ஆதாரங்கள் மீதான வட்டி வருவாய் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததே இதற்குக் காரணம். குறிப்பாக, இதில் பெரும்பகுதி ஐரோப்பிய நாடுகளுக்கு குறைவான வட்டியில் கடன் வழங்கப்பட்டுள்ளது.
வளரும் நாடுகளுள் ஒன்றாக விளங்கும் இந்தியாவில் தில்லி - மும்பை தொழிலக பாதை, நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே திட்டம் ஆகியவற்றில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளோம்.
ஆனால் அந்த அளவுக்கு போதுமான நிதி இல்லை. எனவே, தனியார் துறையினர் அதிக அளவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்.
அடுத்த 10 ஆண்டுகளில் ஆசிய நாடுகளின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.432 லட்சம் கோடி தேவைப்படும்.
ஆனால், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி ஆதாரம் வெறும் ரூ.54 ஆயிரம் கோடியாக உள்ளது. உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றினால் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும்.
எனவே, பொதுமக்களிடம் உள்ள சேமிப்பு, வரிவிதிப்பு ஆகிய பல்வேறு வழிகளில் நிதியை திரட்டி உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.