Enable Javscript for better performance
சீக்கியர் போராட்டம்: 2-ஆவது நாளாக சோனியா வீடு முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டதைக் கண்டித்து, தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தை நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.

    வழக்கில் இருந்து சஜ்ஜன் குமாரை கட்கர்டூமா நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை விடுதலை செய்தது.

    அதைக் கண்டித்து, தில்லியில் உள்ள சீக்கிய அமைப்புகள் செவ்வாய், புதன் இரு நாள்களிலும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

    கடந்த புதன்கிழமை ஏராளமான சீக்கியர்கள், சோனியா காந்தியின் வீடு அமைந்துள்ள அக்பர் சாலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதையடுத்து, மத்திய துணை ராணுவப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று கூட்டத்தைக் கலைத்தனர்.

    ஜந்தர் மந்தர், திலக் நகர், சுபாஷ் நகர் ஆகிய பகுதிகளில் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இரண்டாவது நாளாக வியாழக்கிழமை காலையிலும் சோனியா காந்தியின் இல்லத்தை முற்றுகையிட மான்சிங் சாலை அருகே தில்லி சீக்கிய குருத்வாரா பிரபந்தக், சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த சீக்கியர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்.

    அதையொட்டி அக்பர் சாலை-மான்சிங் சாலை சந்திப்பில் போலீஸார் தடுப்புகளை அமைத்திருந்தனர். அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    எனினும், போலீஸாரை தள்ளிவிட்டு, தடுப்புகள் மீது ஏறி குதித்து அக்பர் சாலையில் பலர் நுழைந்தனர்.

    அங்கு நின்றிருந்த போலீஸ் வாகனங்களில் ஏறிய சிலர் சோனியா ஒழிக, காங்கிரஸ் அரசு ஒழிக என்று கோஷம் எழுப்பினர். சோனியா வீட்டு முன்பாக சஜ்ஜன் குமாரின் உருவ பொம்மையை தீயிட்டுக் கொளுத்தினர்.

    அதனால், சுமார் இரண்டு மணி நேரம் அந்தப் பகுதியில் சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    பின்னர், போலீஸ் உயரதிகாரிகள் சீக்கிய குருத்வாரா பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினர். அதன் பிறகு போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதற்கிடையே, ஒரு பிரிவு சீக்கியர்கள் மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே இல்லம் அமைந்துள்ள கிருஷ்ண மேனன் மார்க் பகுதிக்குச் சென்று போராட்டம் நடத்தத் திட்டமிட்டனர்.

    இதை அறிந்த போலீஸார், அந்தச் சாலையை இணைக்கும் அனைத்துச் சந்திப்புகளிலும் தடுப்புகளை அமைத்தனர்.

    கிருஷ்ண மேனன் மார்கில்தான் முன்னால் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்களின் இல்லம் அமைந்துள்ளது. அதனால், அப்பகுதி வழியாக நாடாளுமன்றச் சாலை, இந்தியா கேட் செல்ல வேண்டிய வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai