Enable Javscript for better performance
நீதித்துறையில் சீர்திருத்தம் அவசியம்: மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில் சிபல்- Dinamani

சுடச்சுட

    

    நீதித்துறையில் சீர்திருத்தம் அவசியம்: மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில் சிபல்

    By dn  |   Published on : 14th May 2013 01:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ""நீதித் துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வலுப்படுத்த அத்துறையில் சீர்திருத்தம் அவசியம்; உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையை கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சர் பொறுப்பை கூடுதலாக திங்கள்கிழமை ஏற்றுள்ள மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.

    "நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சட்ட நடைமுறைகள் உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, இடையூறாக இருக்கக்கூடாது.

    அதை உறுதிப்படுத்தும் வகையில் சட்டத்துறை செயல்பாடுகள் எளிமைப்படுத்தப்படும். நீதித் துறை நியமனங்களும், செயல்பாடுகளும் வெளிப்படையாக இருக்க நடவடிக்கை எடுப்பேன்.  விசாரணை முதல் தீர்ப்பு வழங்குதல் வரை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றும் அவர் குறிப்பிட்டார்.

    நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான சிபிஐ அறிக்கையைத் திருத்தியதாக எழுந்த புகாரையடுத்து, சட்ட அமைச்சராக இருந்த அஸ்வனி குமார் கடந்த 8-ஆம் தேதி பதவியை ராஜிநாமா செய்தார்.

    சிபிஐ அறிக்கை திருத்தப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், நீதித்துறையில் ""சீர்திருத்தம்'' அவசியம் என்றும் நீதிபதிகள் நியமனத்தில் ""வெளிப்படைத் தன்மை'' கடைப்பிடிக்கப்படும் என்றும் தற்போது கபில் சிபல் கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

    ரயில்வே அமைச்சராக ஜோஷி பொறுப்பேற்பு: இதற்கிடையே, ரயில் பவனில் ரயில்வே அமைச்சர் பொறுப்பை கூடுதல் பொறுப்பாக ஏற்றுக்கொண்ட மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சி.பி. ஜோஷி கூறுகையில், ""ரயில்வே வாரிய உறுப்பினர் நியமன முறைகேடு விவகாரத்தால் ரயில்வே துறை மீது களங்கம் ஏற்பட்டுள்ளது. அதைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இது தொடர்பாகத் துறை ரீதியிலான விசாரணை நடைமுறைகள் வெளிப்படையாகவும், பாரபட்சமின்றியும் இருப்பதை உறுதிப்படுத்துவேன்'' என்றார்.

      ரயில்வே அமைச்சராக இருந்த பவன் குமார் பன்சால், ரயில்வே வாரிய உறுப்பினர் நியமனத்தில் ஊழல் எழுந்த குற்றச்சாட்டையடுத்து, தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

    அஸ்வனி குமார் மற்றும் பவன்குமார் பன்சால் இருவரின் ராஜிநாமாவைத் தொடர்ந்து, அவர்கள் வகித்துவந்த அமைச்சர் பொறுப்புகள் முறையே கபில் சிபலுக்கும், சி.பி. ஜோஷிக்கும் வழங்கப்பட்டுள்ளது.

    மீண்டும் கூடுதல் பொறுப்பு:  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரிணமூல் காங்கிரஸ் விலக்கிக் கொண்டதையடுத்து, அக்கட்சியைச் சேர்ந்த முகுல் ராய் தான் வகித்து வந்த ரயில்வே அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார். அதையடுத்து, ரயில்வே அமைச்சர் பொறுப்பு ஒரு மாதத்துக்கு ஜோஷி வசம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai