உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் "பத்ம' விருதுகள் அளிக்க பரிந்துரை
By dn | Published on : 10th November 2013 02:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பத்ம விருதுகளுக்கு முக்கிய பிரமுகர்கள் சிலர் தங்களது உறவினர்களையும், நண்பர்களையும் பரிந்துரை செய்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள உள்துறை அமைச்சகமானது, இந்த ஆண்டுக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட 1,300 பேர் கொண்ட பெயர் பட்டியலை அளித்துள்ளது.
அதில் காங்கிரஸ் தலைவர் மோதிலால் வோரா, மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா, எம்.பி. சுப்பராமி ரெட்டி, ஹிந்துஸ்தானி இசைப் பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் உள்ளிட்டோர் பல்வேறு நபர்களுக்கும் இந்த விருதுகளை அளிக்குமாறு பரிந்துரை அளித்துள்ளனர்.
"பாரத ரத்னா' விருது பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் மூன்று பேருக்கு பத்ம விருதுகளை அளிக்குமாறு பரிந்துரைத்தார். அவரது சகோதரி உஷா மங்கேஷ்கர், பின்னணிப் பாடகர் சுரேஷ் வடேகர், சமூக ஆர்வலர் ராஜ்மால் பரேக் ஆகியோரே அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், "பத்மவிபூஷண்' விருது பெற்றவரும், சரோட் இசைக் கலைஞருமான உஸ்தாத் அம்ஜத் அலி, தனது மகன்களான அமான், அயான் மற்றும் ஹிந்துஸ்தானி பாடகர் கௌஷிக் சக்ரவர்த்தி, தபேலா கலைஞர் விஜய் காட்டே, ஓவியர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி என்ற நடராஜா கிருஷ்ணமூர்த்தி, சிதார் இசைக் கலைஞர் நீலாத்ரி குமார் ஆகிய 6 பேரையும் இவ்விருதுகளுக்குப் பரிந்துரைத்துள்ளார்.
நடிகையும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜெயப்பிரதாவை சமாஜவாதி கட்சியின் முன்னாள் பொதுச் செயலர் அமர் சிங் பரிந்துரைத்துள்ளார். ஆனால், உஷா மங்கேஷ்கர் மற்றும் உஸ்தாத் அம்ஜத் அலியின் மகன்களான அமான், அயான் ஆகியோரின் பெயர்கள் இந்த ஆண்டுக்கான பத்ம விருது தேர்வாளர்களின் பட்டியலில் இடம் பெறவில்லை.
பிரபல பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் 9 நபர்களையும், மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா 8 பேரையும், உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே மேடை நாடகக் கலைஞர்கள் 2 பேரையும், வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் 2 பேரையும், காங்கிரஸ் எம்.பி. விஜய் தார்தா 3 பேரையும் பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
பத்ம விருதுகளுக்கு ஏராளமான சிபாரிசுகள், அதிலும் குறிப்பாக பணப் பலன் அளிக்கக் கூடிய மருத்துவம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு தவிர்க்க முடியாததாகி விட்டது என தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் சுபாஷ் அகர்வால் தெரிவித்தார்.