Enable Javscript for better performance
பெண் வழக்குரைஞருக்கு பாலியல் தொந்தரவு: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியை விசாரிக்க தனிக் குழு அமைப்பு- Dinamani

சுடச்சுட

    

    பெண் வழக்குரைஞருக்கு பாலியல் தொந்தரவு: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியை விசாரிக்க தனிக் குழு அமைப்பு

    By dn  |   Published on : 13th November 2013 05:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    advocate

    பெண் வழக்குரைஞருக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்க, மூன்று நீதிபதிகள் அடங்கிய தனிக் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    பெண் வழக்குரைஞர் ஒருவர், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டார் என்று வெளியான செய்தி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கொல்கத்தாவில் உள்ள தேசிய நீதி அறிவியல் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் பட்டம் பெற்ற மாணவி ஒருவர், அண்மையில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக இணையதளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    கடந்த டிசம்பர் மாதம் தில்லியில் பயிற்சியில் இருந்தபோது ஹோட்டல் அறையில் தனக்கு அந்த நீதிபதி பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், தனது தாத்தா வயதிலான அவரின் செயல்பாட்டால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவத்தின் கவனத்துக்கு வழக்குரைஞர் எம்.எல்.சர்மா எடுத்துச் சென்றார். இந்த விவகாரத்தை பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில் தானாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    பெண் வழக்குரைஞர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது குறித்து தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு முன் அட்டார்னி ஜெனரல் ஜி.இ.வாஹன்வதியும் செவ்வாய்க்கிழமை முறையிட்டார். பத்திரிகையில் வெளியாகிய செய்தியை வாசித்துக் காட்டினார். மேலும், இதை நீதிமன்றம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    பணிபுரியும் இடங்களில் பெண்களை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்க விசாகா வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வகுத்தளித்துள்ள விதிமுறைகளை இந்த நீதிமன்றம் கவனத்தில் கொள்வது அவசியம் என்றும் வாஹன்வதி சுட்டிக்காட்டினார்.

    இதையடுத்து, தலைமை நீதிபதி பி.சதாசிவம் கூறியதாவது: அரசுத் தலைமை வழக்குரைஞராக இந்த விவகாரத்தில் நீங்கள் (வாஹன்வதி) எடுக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. இதை நாங்களும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. பெண் வழக்குரைஞரை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பாலியல் ரீதியாக துன்புறுத்தினாரா, இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் இந்த நீதிமன்றம் அக்கறையுடன் உள்ளது. இதில் நடவடிக்கை எடுப்பதில் தாமதிக்க விரும்பவில்லை.

    பெண் வழக்குரைஞர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி அளவில் எங்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து எனது தலைமையிலான அமர்வில் இடம் பெற்றுள்ள மற்ற இரு நீதிபதிகளிடமும் மதிய உணவு இடைவெளியின் போது ஆலோசித்தேன். அதுகுறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம்.லோத்தா, ஹெ.எல். தத்து, ரஞ்சனா பிரகாஷ் ஆகியோர் அடங்கிய தனிக் குழுவை நியமித்துள்ளேன். இந்தக் குழுவானது புகார் குறித்து முழுமையாக விசாரிக்கும். செவ்வாய்க்கிழமை மாலையே விசாரணையைத் தொடங்கும். உண்மையைக் கண்டறிந்து அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai