சுடச்சுட

    

    குஜராத் முன்னாள் அமைச்சர் அமித் ஷா உத்தரவுப்படி அந்த மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் காவல்துறையால் சட்டவிரோதமாக வேவு பார்க்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்த காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

    புலனாய்வு இணையதளங்களான கோப்ராபோஸ்ட், குலாயில் ஆகியவை, நவம்பர் 15ஆம் தேதி, குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சரும் மோடிக்கு மிகவும் நெருங்கியவருமான அமித் ஷா ஒரு ஐபிஎஸ் அதிகாரியுடன் பேசிய உரையாடலின் பதிவை வெளியிட்டன. அதில், தனக்குத் தெரிந்த "சாஹேப்' என்பவருக்காக, கட்டடக் கலை வல்லுநரான இளம்பெண் ஒருவரைக் கண்காணிக்குமாறு போலீஸாருக்கு அமித் ஷா உத்தரவிடுவதாக உரையாடல் இடம் பெற்றிருந்தது.

    இதையடுத்து, தனிப்பட்ட ஒருவரை சட்டவிரோதமாகக் கண்காணிக்க காவல்துறையைப் பயன்படுத்தியதாக மோடி அரசு மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியது. தவிர, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக் குழு அமைத்து இதை விசாரிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரியுள்ளது.

    பெண் ஒருவர் சட்டவிரோதமாக வேவு பார்க்கப்பட்டது உண்மை என்றால், பிரதமர் வேட்பாளராக இருக்க மோடிக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் புகார்களை பாஜக மறுத்துள்ளது. அதன் செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லேகி இதுகுறித்துக் கூறியதாவது:

    இந்தப் பிரச்னையில் காங்கிரஸ் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை. வேவு பார்க்கப்பட்டதாகச் சொல்லப்படும் இளம்பெண்ணோ, அவரது குடும்ப உறுப்பினர்களோ குஜராத் மாநில அரசு குறித்து புகார் கூறவில்லை. ஆனால், தனிப்பட்ட ஒருவரின் குடும்பப் பிரச்னையை அரசியல் ஆதாயத்திற்காக பெரிதுபடுத்துகிறது காங்கிரஸ்.

    இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள பெண் தொடர்பான முழு விவரங்களையும் சில காரணங்களால் வெளியிட முடியாது.

    ஆனால், சட்டவிரோதமாக எதுவும் நடந்துவிடவில்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். இணையதளங்கள் வெளியிட்ட உரையாடலிலேயே கூட, பாஜகவுக்கு சாதகமான அம்சங்கள்தான் உள்ளன.

    நாட்டில் நரேந்திர மோடிக்கு அதிகரித்துவரும் செல்வாக்கால் நிலைகுலைந்து போயுள்ள காங்கிரஸ் கட்சியின் இயலாமையே இத்தகைய புகார்களாக வெளிப்படுகிறது.

    இந்த விவகாரத்தில் குறிப்பிடப்படும் இளம்பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் அத்துமீறிச் செயல்பட்டவர்கள் காங்கிரஸ் கட்சியும் அதற்குத் துணை போனவர்களும்தான் என்றார் மீனாட்சி லேகி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai