கால்நடை தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத் குற்றவாளி

லாலுவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கப்பட்டால் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அவருடைய எம்.பி. பதவி பறிபோவதுடன், ஆறு ஆண்டுகள் வரை தேர்தலில் பங்கேற்க முடியாமல் தடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் ஏற்கெனவே லாலு கைது செய்யப்பட்டு 135 நாள் நீதிமன்ற காவலில்
கால்நடை தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத் குற்றவாளி

கால்நடை தீவன ஊழல் வழக்கில் பிகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு அளித்தது.

லாலு பிரசாத் தவிர மூன்று முறை பிகார் மாநில முதல்வராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெகன்னாத் மிஸ்ரா, ஐக்கிய ஜனதா தள கட்சியின் எம்.பி. ஜெகதீஷ் சர்மா, நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட 44 பேர் குற்றவாளி என்றும் ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து லாலு பிரசாத் ராஞ்சியில் உள்ள வீர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஜெகன்னாத் மிஸ்ரா உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் அவர்களுக்கு சிறையில் இருந்த படியே வீடியோ கான்பரன்சிங் மூலம் அக்டோபர் 3 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

அப்போது, லாலுவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கப்பட்டால் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அவருடைய எம்.பி. பதவி பறிபோவதுடன், ஆறு ஆண்டுகள் வரை தேர்தலில் பங்கேற்க முடியாமல் தடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் ஏற்கெனவே லாலு கைது செய்யப்பட்டு 135 நாள் நீதிமன்ற காவலில் இருந்துள்ளார்.

"லாலு பிரசாத், ஜெகன்னாத் மிஸ்ரா உள்பட 36 பேருக்கு குறைந்தது மூன்று ஆண்டுகள் முதல் அதிபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்க வாய்ப்பு உள்ளது' என்று இந்த வழக்கில் ஆஜராகி வரும் சிபிஐ வழக்குரைஞர் தெரிவித்தார்.

இந்த தீர்ப்பை பாஜக, ஐக்கிய ஜனதா தளம் வரவேற்றுள்ள அதே வேளையில் காங்கிரஸ் கட்சி "சட்டம் தன் கடமையை செய்துள்ளது' என்று கருத்து தெரிவித்துள்ளது.

பிகார் அரசியல் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் இந்த தீர்ப்பு அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

அமைதியுடன் திரும்பினார்: கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ரூ. 37.7 கோடி கால்நடை தீவன ஊழல் வழக்கில் ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி பிரவாஸ் குமார் சிங் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கினார்.

லாலு பிரசாத் யாதவ் தனது மகன் தேஜஸ்வி பிரதாப்புடன் ராஜ்சி நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்றத்துக்கு உள்ளே செல்வதற்கு முன்பு வெளியில் கூடியிருந்த கட்சித் தொண்டார்களுக்கு கையசைத்துவிட்டு உற்சாகத்துடன் சென்றார். நீதிபதி பிரவாஸ் குமார் சிங் காலை 11 மணிக்கு தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார். நீதிமன்றத்துக்குள் இரண்டாவது வரிசையில் அமர்ந்து லாலு கேட்டார்.

பின்னர் சிறைக்கு அழைத்து செல்லும் போது அமைதியாக சென்றார். தீர்ப்புக் குறித்து லாலு கருத்து தெரிவிக்கவில்லை. இந்த வழக்கில் லாலுவுக்கு விடுதலை கிடைத்துவிடும் என்று அக்கட்சியின் தொண்டர்கள் 200 பேர் பட்டாசுகளுடன் நீதிமன்றத்துக்கு வெளியே ஆவலுடன் காத்திருந்து பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

குற்றவாளிகள் யார்?: இந்த வழக்கில் மொத்தம் 45 பேர் குற்றவாளிகள் என்று சிபிஐ அறிவித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும் பிகார் மாநில முன்னாள் முதல்வருமான  லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெகன்னாத் மிஸ்ரா, ஐக்கிய ஜனதா தள கட்சி எம்.பி. ஜெகதீஷ் சர்மா, பிகார் மாநில கால்நடைத்துறையின் முன்னாள் அமைச்சர் வித்யா சாகர் நிஷாத், முன்னாள் எம்.எல்.ஏ. துருவ் பகத், ஐ.ஏ.எஸ். அதிகாரி கே. ஆறுமுகம் உள்பட 45 பேர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் கீழ் குற்றவாளிகள் என்று கூறப்பட்டுள்ளது.

மேல் முறையீடு: ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பு கட்சிக்கு பின்னடைவு ஏற்படுத்தி இருந்தாலும் நாங்கள் துவண்டுபோகவில்லை. இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்படும். இந்த விவகாரத்தில் இறுதிவரை போராடுவோம் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி எம்.பி.யான ரகுவன்ஸ் பிரசாத் சிங் கூறினார்.

இரண்டாவது நபர் லாலு: குற்றம் நிரூபிக்கப்பட்ட எம்.பி.க்களின் பதவிகள் உடனடியாக பறிக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, பதவி இழக்கும் இரண்டாவது நபராக லாலு பிரசாத் யாதவ் உள்ளார்.

மருத்துவக்கல்லூரி சீட்டு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி.யான ரஷீத் மசூத் குற்றவாளி என்று செப்டம்பர் 19 ஆம் தேதி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், பதவி இழக்கும் முதல் அரசியல்வாதியானார். இவரைத் தொடர்ந்து ஜெகதீஷ் சர்மா எம்.பி.  மூன்றாவது இடத்தில் உள்ளார். அரசியல் வாதிகளை தகுதி இழப்பதில் இருந்து காப்பற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த அவசரச்சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று முதல் இன்று வரை....

1990-களில், பிகார் மாநிலத்தில் போலி ரசீதுகள் தாக்கல் செய்யப்பட்டு ரூ. 37.7 கோடி கால்நடை தீவன ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது.

 1996, ஜனவரி - கால்நடை துறையில் சோதனை நடத்தப்பட்டது.

 1996, மார்ச், 11 - பாட்னா நீதிமன்றம் சிபிஐ க்கு வழக்கை மாற்றியது.

 1996, மார்ச், 27 - சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

 1997, ஜூலை 23 - லாலு குற்றவாளியாக சேர்க்கபட்டார்.

 1997, ஜூலை 25 - முதல்வர் பதவியில் இருந்து விலகினார். மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கினார்.

 1997, ஜூலை 30 - லாலு சரணடைந்தார், நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டார்.

 1997, டிசம்பர் 12 - 135 முறை நீதிமன்றக்காவலுக்கு பிறகு ஜாமீன் கிடைத்தது.

 2000, ஏப்ரல் 5 - குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

 2002, பிப்ரவரி: ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.

 2013, ஆகஸ்ட் 13: வழக்கை விசாரித்து வரும் நீதிபதியை மாற்ற கோரி லாலு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 2013, செப்டம்பர் 17: விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com