சுடச்சுட

  

  தேர்தலுக்குப் பிறகு மூன்றாவது அணி வேட்பாளரே பிரதமர்: முலாயம் சிங்

  By dn  |   Published on : 08th October 2013 04:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  07delmul

  அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு   காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள் தலைமையிலான கூட்டணிகள் அல்லாது, மூன்றாவது அணி நிறுத்தும் வேட்பாளரே நாட்டின் பிரதமராக வருவார் என்று சமாஜவாதி கட்சி தலைவர் முலாயம் சிங் கூறினார்.

   இது தொடர்பாக தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

   மத்தியில் காங்கிரஸ், பாஜக கூட்டணிகள் அல்லாத மாற்று அணி கடந்த காலங்களில் உருவானபோதும் அது வலுவானதாக திகழவில்லை. இருப்பினும், உண்மையான மதச்சார்பற்ற அணியாக அது விளங்கியது. ஆனால், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக அல்லாத மாற்று அணிக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இது குறித்து பிரகாஷ் காரத் உள்ளிட்ட இடதுசாரி கட்சித் தலைவர்களுடன் பேசி வருகிறேன்.

   அதே சமயம், மாற்று அணியில் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்றாக தேர்தலை  சந்தித்தாலும் தொகுதிப் பங்கீடு, இடங்கள் ஒதுக்கீடு போன்றவற்றில் பிரச்னை ஏற்பட்டு, அணிக்குப் பலவீனமாக அமையும். எனவே, ஒவ்வொரு கட்சியும் அதன் சக்திக்கு ஏற்ப புரிந்துணர்வுடன் தேர்தலை சந்திக்க வேண்டும். அதில் வெற்றி பெறும் கட்சிகள் தேர்தலுக்குப் பிறகு அமையும் மூன்றாவது அணியில் சேர வேண்டும். அப்போது காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றான சக்தியாக விளங்கும் மூன்றாவது அணி யாரை வேட்பாளராக முன்னிறுத்துகிறதோ அவரே நாட்டின் பிரதமராக வர முடியும். வகுப்புவாத சக்திகளை எதிர்க்க ஒருமித்த கருத்துடைய மதச்சார்பற்ற கட்சிகளின் தலைவர்களை இம் மாதம் 30-ஆம் தேதி சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன். அக் கூட்டத்தில் யார், யார் பங்கேற்பார்கள் என்பதை இப்போது கூற மாட்டேன்' என்றார் முலாயம் சிங் யாதவ்.

   

  பெரிய மாநிலங்களைப் பிரிக்க எதிர்ப்பு

   "பெரிய மாநிலங்களைப் பிரித்து சிறு, சிறு மாநிலங்களை உருவாக்குவது பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். அத்தகைய முயற்சி எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்பதை வரலாறு உணர்த்தியுள்ளது.

  எனவே, மிகப் பெரிய மாநிலங்களைப் பிரித்து சிறிய மாநிலத்தை உருவாக்கும் நடவடிக்கைக்கு சமாஜவாதி கட்சி எதிராக உள்ளது. சிறிய மாநிலங்கள் தோன்றினாலும், அவற்றில் நிர்வாகக் கோளாறுகள் இயல்பாகவே இருக்கும். குறிப்பாக, வடக்கு, மேற்கு மாநிலங்களைப் பிரிக்கும் போது கட்டமைப்புக் குறைபாடுகள் மட்டுமன்றி நக்ஸல் பிரச்னைகளும் அதிகரிக்கும்' என்றார் முலாயம் சிங்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai