ஆந்திரத்தில் ஸ்டிரைக் நீடிக்கிறது: அரசு ஊழியர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி

ஆந்திர அரசுடன் நடத்திய பேச்சுவார்த்ததை தோல்வியில் முடிந்ததை அடுத்து, வேலைநிறுத்தத்தைத் தொடர்வது என்று அந்த மாநில அரசு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஆந்திரத்தில் ஸ்டிரைக் நீடிக்கிறது: அரசு ஊழியர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி

ஆந்திர அரசுடன் நடத்திய பேச்சுவார்த்ததை தோல்வியில் முடிந்ததை அடுத்து, வேலைநிறுத்தத்தைத் தொடர்வது என்று அந்த மாநில அரசு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தைப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள் சங்கத்தினர் (என்.ஜி.ஓ.) கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதியில் இருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சங்கத்தின் பிரதிநிதிகள், முதல்வர் கிரண்குமார் ரெட்டி செவ்வாய்க்கிழமை இரவு பேச்சுவார்த்தை நடத்தினார். வேலைநிறுத்தத்தைக் கைவிடுமாறு முதல்வர் விடுத்த கோரிக்கையை ஊழியர்கள் சங்கத்தினர் ஏற்காததைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் புதன்கிழமை ஆந்திர மாநில அமைச்சரவைக் குழுவுடன் பேச்சு நடத்தினர். அதைத் தொடர்ந்து முதல்வர் கிரண்குமார் ரெட்டியுடன் மதியம் 3 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஹைதராபாதில் உள்ள தலைமைச் செயலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. முதல்வருடனான சந்திப்புக்குப் பின் அரசு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் யூ.முரளி கிருஷ்ணா, செய்தியாளர்களிடம் கூறியது:

மக்களுக்கு அசௌகர்யம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுமாறு முதல்வர் கேட்டுக் கொண்டார். தாம் முதல்வராகத் தொடரும் வரை மாநிலத்தைப் பிரிக்க விட மாட்டேன் என்றும் அவர் எங்களிடம் தெரிவித்தார். ஆனால், மாநிலப் பிரிவினை விவகாரத்தில் குறிப்பிட்ட உத்தரவாதம் அளிக்கப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்று நாங்கள் அவரிடம் தெரிவித்தோம். அரசின் கோரிக்கை குறித்து எங்கள் சங்கத்தின் பொதுக்குழுவில் நாங்கள் விவாதித்து, வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து முடிவெடுப்போம் என்றார் முரளிகிருஷ்ணா.

ஆந்திர என்ஜிஓ சங்கத்தின் தலைவர் பி.அசோக்பாபு கூறுகையில், ""மாநிலத்தைப் பிரிப்பது தொடர்பான தீர்மானத்தை சட்டப்பேரவையில் தோற்கடிப்பதாக முதல்வர் எங்களிடம் வாக்குறுதி அளித்தார். ஆனால், அவரது வாக்குறுதியை மட்டும் நம்பி நாங்கள் செயல்பட முடியாது. எங்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டுமானால், மத்திய அரசிடம் இருந்தும் மாநில அரசியல் கட்சிகளிடம் இருந்தும் எங்களுக்கு உத்தரவாதம் கிடைக்க வேண்டும்'' என்றார்.

இருளில் மூழ்கியுள்ள சீமாந்திரா: ஆந்திர அரசு ஊழியர்கள் சங்கத்தின் 59 நாள் வேலைநிறுத்தம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாதபோதிலும், கடந்த 3 நாள்களாக மின்வாரிய ஊழியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்தால் கடலோரப்பகுதி மற்றும் ராயலசீமையில் உள்ள 13 மாவட்டங்கள் கடும் மின்வெட்டைச் சந்தித்து வருகின்றன. அவை தொடர்ந்து இருளில் மூழ்கியுள்ளன.

மின்வாரிய ஊழியர்களின் வேலைநிறுத்தத்துக்கு முன்பு ஆந்திர மாநிலத்துக்கு நாள்தோறும் 11000 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வந்தது. கடந்த இரு தினங்களாக இது 8500 மெகாவாட்டாகக் குறைந்துவிட்டது. இதனால் சீமாந்திரமா மட்டுமின்றி ஹைதராபாத் நகரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் வேண்டுகோள்: வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிடுமாறும் அரசு ஊழியர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

""தெலங்கானா தொடர்புடைய பிரச்னைகளைக் கவனிக்க அமைக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர்கள் குழுவிடம், மாநிலத்தைப் பிரிப்பது என்ற முடிவை மறுபரிசீலனை செய்யும்படி வலியுறுத்த நாங்கள் தீவிர முயற்சி எடுப்போம்'' என்று முதல்வர் கிரண்குமார் ரெட்டி தெரிவித்தார்.

நாளை மத்திய அமைச்சர்கள் குழுக் கூட்டம்

தெலங்கானா தனி மாநிலம் அமைக்கும் மத்திய அமைச்சரவையின் முடிவைச் செயல்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர்கள் குழுக் கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை கூடவுள்ளது.

இக் குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி, மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மத்தியப் பணியாளர், பயிற்சித் துறை இணை அமைச்சர் வே. நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராகக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். முதலாவது கூட்டம் என்பதால் இக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

மத்திய அமைச்சர்கள் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள செயல்பாட்டு நெறிமுறைகளில் கூறியிருப்பதாவது:

ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள தேர்தல் தொகுதிகள் அடிப்படையில் தெலங்கானா பகுதிக்கான எல்லையை நிர்ணயித்தல்; புதிய மாநிலத்தில் நீதி, நிர்வாக, சட்டப்பூர்வ அந்தஸ்தை அவை தொடர்புடைய அமைப்புகளுக்கு வழங்குதல்; ஹைதராபாதை பொது தலைநகராக 10 ஆண்டுகளுக்கு வைத்துக் கொண்டு ஆந்திரமும் தெலங்கானாவும் இணைந்து செயல்பட உத்திகளை வகுத்தல்; நீதி, நிதி, நிர்வாக நடவடிக்கை மேற்கொள்ளுதல்; தனி மாநிலம் உருவாக்கப்படுவதால் பின்தங்கிய பகுதிகள், மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி நடவடிக்கைகளைத் திட்டமிடல்; சட்டம் - ஒழுங்கு, குடிமக்களின் பாதுகாப்பு, நல்லிணக்கதைப் பேணிக் காக்கும் வழிமுறைகளை வகுத்தல், நிலம், நீர், மின்சாரம், நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்ற வளங்களை பரஸ்பரம் ஆந்திரமும், தெலங்கானாவும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புகளைக் கண்டறிதல் போன்றவற்றை மத்திய அமைச்சர்கள் குழு ஆராயும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com