சுடச்சுட

  

  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு அறிவிப்பு

  By dn  |   Published on : 26th September 2013 09:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  India_logo

  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் என 80 லட்சம் பேர் பயன் அடைவார்கள். இந்த ஊதியக் குழுவை அமைப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், 2016 ஜனவரி முதல் தேதியிலிருந்து இதன் பரிந்துரைகள் அமலுக்கு வரும் என்றும் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிக்கை ஒன்றில் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

  அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: 7-வது ஊதியக் குழு மூலம் மத்திய அரசின் 50 லட்சம் ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள்.

  பொதுவாக ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக் குழுவை மத்திய அரசு அமைத்து, சம்பள உயர்வு அளித்து வருகிறது. இதை மாநில அரசுகளும் சில திருத்தங்களுடன் பின்பற்றி வருகின்றன.

  தற்போதைய 7-வது ஊதியக் குழு தனது பரிந்துரைகளை அளிக்க 2 ஆண்டுகாலம் அவகாசம் எடுத்துக் கொள்ளும். எனவே, 2016 ஜனவரி முதல் தேதியிலிருந்து புதிய ஊதியம் அமலுக்கு வரும்.

  இந்த ஊதியக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் குறித்து, சம்பந்தப்பட்ட துறையினருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

  மத்திய அரசு ஊழியர்களுக்கு 6-வது ஊதியக் குழு பரிந்துரைகள் 2006 ஜனவரி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார் சிதம்பரம்.

  காங்கிரஸ் தகவல் தொடர்புப் பிரிவு பொதுச் செயலாளர் அஜய் மக்கான் தனது டிவிட்டர் பதிவில், ""திறமைசாலிகள் அரசுப் பணிகளில் சேர்வதை ஊக்கப்படுத்தவேண்டும். அதற்கு ஊதியக் குழுக்கள் உதவுகின்றன.

  2003-ல் பாஜக தலைமையிலான அரசு 6-வது ஊதியக் குழுவை அமைக்க மறுத்தது. ஆனால் அடுத்து வந்த காங்கிரஸ் அரசு 2005-ஆம் ஆண்டு 6-வது ஊதியக் குழுவை அமைத்தது. இப்போது 7-வது குழுவையும் அமைத்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

  மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறுகையில், ""ஊதியக் குழுக்கள் அமைக்கப்படுவது ஊழியர்களின் உரிமை. ஊதியக் குழுக்கள் பரிந்துரை செய்தால்தான் அரசால் அதை நிறைவேற்ற முடியும்'' என்று குறிப்பிட்டார்.

  இந்த ஆண்டு இறுதியில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதியக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள ஊழியர் சங்கம், ஊதியக் குழுவின் பரிந்துரைகளை 2011-ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்தே அமல்படுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளது.

  மத்திய அரசு ஊழியர் மற்றும் பணியாளர் சங்கத்தின் தலைவர் கே.கே.என். குட்டி கூறுகையில், ""மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம் மறு நிர்ணயம் செய்யப்படுவதை அடிப்படையாகக் கொண்டு, 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி புதிய விகிதத்தை 2001, ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து கணக்கிட வேண்டும்.

  மேலும் 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

  ஊழியர்களுக்கான பல்வேறு படித் தொகைகளும் அடிப்படை சம்பளத்தின் விகிதாச்சாரத்தில் அமைவதால், அடிப்படை சம்பளம் உயர்வது படித் தொகைகளும் உயர்வதற்கு வழி வகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai