உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மத்திய அரசு பாகுபாட்டுடன் செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு (பொலிட் பீரோ) வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமன விவகாரத்தில், நீதித்துறையின் சுதந்திரத்திற்கு பாதகம் விளைவிக்கும் வகையில் மோடியின் அரசு செயல்பட்டுள்ளது.
இத்தகைய ஒருதலைபட்சமான செயல்பாட்டால் பாதிப்பு ஏற்படாதவாறு உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணி
யத்துக்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மோடியின் அரசு அவமானகரமான முடிவினை எடுத்துள்ளது.
சொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர் வழக்கில், பாஜக தலைவர்களில் ஒருவரான அமித் ஷாவுக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்படுவதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு உதவியதில் முக்கியப் பங்காற்றியதன் விளைவாகவே அவர் தண்டிக்கப்பட்டிருக்கிறார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு நீதிபதிகள் தேர்வுக் குழு பரிந்துரைத்தவர்களில் மூத்த வழக்குரைஞரான ரோஹிண்டன் நாரிமன், கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் மிஸ்ரா, ஒடிஸா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் ஆகியோரை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது.
ஆனால், அந்தப் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றிருந்த கோபால் சுப்ரமணியத்தின் பெயரை நிராகரித்து அது தொடர்பான கோப்பை தேர்வுக் குழுவுக்கே மத்திய அரசு திருப்பி அனுப்பியது.