சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான வழக்கின் தீர்ப்பை சனிக்கிழமைக்கு (28ஆம் தேதி) ஹைதரபாத் சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு வியாழக்கிழமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஹைதராபாத் நகர சிறப்பு நீதிமன்ற நீதிபதி சக்ரவர்த்தி, தீர்ப்பை ஒத்திவைத்து அறிவித்தார்.
முன்னதாக இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனரும், முன்னாள் தலைவருமான பி.ராமலிங்க ராஜு உள்பட குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். எனினும் செய்தியாளர்கள் யாரும் நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.
ஐந்தரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக 216 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். 3,038 ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
சத்யம் நிறுவனத்தின் வருவாய் அதிக அளவில் உள்ளதாக பல ஆண்டுகளாக மிகைப்படுத்தி கணக்கு காட்டி, முறைகேட்டில் ஈடுபட்டதை அந்த நிறுவனத்தின் தலைவராக இருந்த ராமலிங்க ராஜு ஒப்புக்கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, நாட்டின் மிகப்பெரிய கணக்கு மோசடி என்று வர்ணிக்கப்பட்ட இந்த முறைகேடு 2009ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி வெளிச்சத்துக்கு வந்தது.