""எதிர்க்கட்சியாக இருந்தபோது, தீவிரவாத விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டை பாஜக எடுத்தது. ஆனால் மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையின் தீவிரத்தைக் குறைக்கும் நடவடிக்கையில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது'' என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து தில்லியில் அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சருமான மணீஷ் திவாரி, செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
ஜமாத்-உத்-தாவா அமைப்பை பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவித்திருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.
சர்வதேச அளவில் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு இது பெரும் உதவியாக இருக்கும். இருப்பினும், இது மிகவும் காலம் தாழ்ந்த நடவடிக்கை ஆகும்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது, கடந்த 10 ஆண்டுகாலமாக தீவிரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் சாத்தியமில்லை என்று பாஜக கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருந்தது. ஆனால் மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், தில்லியில் நடைபெற்ற பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வருமாறு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு அழைப்பு அனுப்பியது.
இதேபோல், ஏற்கெனவே தான் தெரிவித்த கருத்தில் இருந்து முற்றிலும் மாறாக பாஜக நடந்து வருகிறது. தனது ஆட்சிக்காலத்தின் முதல் 30 நாள்களிலும் இதனையே அக்கட்சி பின்பற்றியது. இதன்மூலம், தீவிரவாதத்துக்கு எதிரான இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையின் தீவிரத்தைக் குறைக்கும் நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டுள்ளது என்று மணீஷ் திவாரி தெரிவித்தார்.