போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் தளவாடங்கள் தவிர ஏனைய ராணுவ உபகரணங்களை தயாரிக்க தொழில் உரிமம் பெற வேண்டிய அவசியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்தத் துறையின் உயர் அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை கூறியதாவது:
பாதுகாப்புத் துறையில் பயன்படுத்தப்படும் தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான ஊக்குவிப்பை தொழில் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தபடி இந்தச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
1951ஆம் ஆண்டு கட்டாய தொழில் உரிமங்கள் முறை சட்டப்படி, பாதுகாப்புத் துறைக்கு வழங்கப்படும் பொருள்களைத் தயாரிப்பதற்கு தொழில் உரிமங்களை நிறுவனங்கள் பெற்றிருக்க வேண்டும். ஆனால் தற்போது போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் தளவாடங்களான கவச வாகனங்கள், டாங்குகள், போர் விமானங்கள் மற்றும் விண்கலங்கள் ஆகியவற்றையும் அவற்றின் உதிரிபாகங்களை தவிர மற்ற உபகரணங்களைத் தயாரிப்பதற்கு உரிமம் பெறத் தேவையில்லை என்ற சலுகையை வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இரவு நேரத்தில் பார்க்க உதவும் சாதனம், கண்காணிப்பு பணிகளுக்கான உபகரணங்கள், வார்ப்புகள், சிறிய அளவிலான மாற்று உதிரி பாகங்கள் போன்ற பொருள்கள் உள்பட ஏராளமான ராணுவத் தயாரிப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டாய உரிம கட்டுப்பாடு அகற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் தொழில்துறையில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும். வெளிநாட்டு நிறுவனங்கள்கூட இங்கு தொழிற்சாலைகளை அமைத்து உபகரணங்களை தயாரிக்க எவ்வித கட்டுப்பாடும் கிடையாது.
மேலும், உரிமம் பெற வேண்டிய பொருள்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்மூலம் ராணுவம் மற்றும் பொதுப் பயன்பாடு என இருவகை பயன்பாட்டில் உள்ள சில பொருள்களைத் தயாரிப்பதற்கு உரிமம் பெற வேண்டுமா என்ற குழப்பம் களையப்பட்டுள்ளது என்றார்.
அரசின் இந்த அறிவிப்பை இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) வரவேற்றுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் வேலைவாய்ப்பு பெருகும் என்றும் கருத்து வெளியிட்டுள்ளது.