ராஜஸ்தானில் முதல்வர் வசுந்தரா ராஜே, தாம் சென்ற வழியில் நேரிட்ட ஒரு வாகன விபத்தில் காயமடைந்தவர்களை அதிகாரியின் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இருப்பினும், விபத்தில் காயமடைந்த 3 பேரில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
ஜெய்ப்பூர் மாவட்டம் ஸ்ரீகங்காநகர் அருகே ராணுவ குடியிருப்பு வழியாக, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க முதல்வர் வசுந்தரா ராஜே வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தார். அப்போது, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் சென்ற வேன் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து நேரிட்டது. இதில், அந்த இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதைக் கண்ட முதல்வர் வசுந்தரா ராஜே, தன்னுடன் வந்த அதிகாரிகளின் பயணத்தை ரத்து செய்து காயமடைந்த 3 பேரையும் மருத்துவமனையில் சேர்க்கும்படி உத்தரவிட்டார். அவர்களில் அப்துல் ஹனீஃப் (52), லாலா (20) ஆகிய இருவர் உயிரிழந்தனர். பாபு என்பவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.