அக்டோபர் 3-இல் வானொலியில் உரையாற்றுகிறார் மோடி
விஜயதசமி நாளான அக்டோபர் 3-ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி, வானொலி மூலம் உரை நிகழ்த்துகிறார்.
இதுகுறித்து, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது: "வானொலியில் எனது முதல் நிகழ்ச்சி அக்டோபர் 3-ஆம் தேதி காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகிறது. அப்போது, எனது சில சிந்தனைகளை மக்கள் மத்தியில் எடுத்துரைப்பேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் உரை, அனைத்திந்திய வானொலி நிலையத்தின் மூலம் ஒலிபரப்பப்படும் எனத் தெரிகிறது. இதற்கு முன்பு, ஆசிரியர் தினத்தன்று மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தயில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.
எதிர்வரும் வானொலி நிகழ்ச்சிக்காக, பிரதமருக்கு தங்கள் கருத்துகளையும், மேம்பாட்டு முறைகள் குறித்த தங்களின் ஆலோசனைகளையும் மக்கள் பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, அரசின் இணையதளமான mygov.nic.in என்ற முகவரியைத் தொடர்பு கொண்டு தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யலாம் என அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.