தில்லி துக்ளக் சாலையில் அரசு ஒதுக்கீடு செய்திருந்த பங்களாவில் இருந்து வெளியேறாமல் இருக்கவும், அதை தனது தந்தையும், முன்னாள் பிரதமருமான சரண் சிங்கின் நினைவிடமாக மாற்றவும் முயன்ற ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சித் தலைவர் அஜித் சிங்கின் முயற்சி செவ்வாய்க்கிழமை தோல்வியடைந்தது.
இது தொடர்பாக அஜித் சிங்கின் வீட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த "மகா பஞ்சாயத்து' கூட்டத்தில் பங்கேற்க வந்த நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் நடைபெற்ற போது அஜித் சிங் அந்த பங்களாவில் இல்லை.
முன்னாள் மத்திய அமைச்சரான அஜித் சிங், அரசு விதித்த இறுதிக் கெடுவுக்குப் பிறகும் துக்ளக் சாலையில் தான் தங்கியிருந்த அரசு பங்களாவை காலி செய்யாமல் பிடிவாதமாக உள்ளார். இதையடுத்து, அந்த பங்களாவுக்கு வழங்கப்பட்ட குடிநீர், மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், "எனது தந்தை சரண் சிங் காலம் முதல், 40 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசித்து வருவதால், அதை சரண் சிங்கின் நினைவிடமாக மாற்ற வேண்டும்' என அஜித் சிங் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது.
இதனிடையே, வியாழக்கிழமை (செப்டம்பர் 25) வீட்டை காலி செய்வதாகக் கூறி, கடந்த வாரம் சில உடைமைகளை தெற்கு தில்லி வசந்த் குஞ்ஜ் பகுதியில் உள்ள குடியிருப்புக்கு மாற்றினார். பின்னர் அஜித் சிங்கும் அதில் குடியேறினார். ஆனால், துக்ளக் சாலை பங்களாவை அரசிடம் ஒப்படைக்காமல் அதை சரண் சிங்கின் நினைவிடமாக மாற்ற அவர் திட்டமிட்டார்.
இது தொடர்பாக முக்கிய முடிவெடுக்க, ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியைச் சேர்ந்த ராகேஷ் திகெய்த், மேற்கு உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த "ஜாட்' சமூகத் தலைவர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் அஜித் சிங்கின் பங்களாவுக்கு செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு வரத் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், பிரதமர் இல்லம் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் சாலையை இணைக்கும் முக்கியப் பகுதியான துக்ளக் சாலையில் அனுமதியின்றி கூட முற்படுவது சட்டவிரோதம் என்று போலீஸார் அறிவித்தனர். மேலும், மெட்ரோ ரயில் மூலம் அஜித் சிங்கின் ஆதரவாளர்கள் வருவதைத் தடுக்க ரேஸ் கோர்ஸ் மெட்ரோ ரயில் நிலையத்தின் அனைத்துப் பகுதி வாயில் கதவுகள் காலை 8.20 மணி முதல் மாலை 5 மணி வரை மூடப்பட்டன.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துக்ளக் சாலையை இணைக்கும் அரபிந்தோ சௌக், பிருத்வி ராஜ் சாலை ஆகியவை தடுப்புகள் மூலம் அடைக்கப்பட்டன.
அதையும் மீறி துக்ளக் சாலைக்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் நடந்து வந்தனர். அஜித் சிங்கின் வீட்டுக்குள் நுழைய முயன்ற அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது "அஜித் சிங் வீட்டை கைப்பற்றுவோம்; சரண் சிங் நினைவிடமாக்குவோம்' என்று அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அனைவரையும் கைது செய்து அருகே உள்ள காவல் நிலையத்துக்கு போலீஸார் கொண்டு சென்றனர். மாலை 6 மணிக்குப் பிறகு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தால் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை துக்ளக் சாலையில் வாகன போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. மாற்றுப் பாதையில் வாகனங்கள் சென்றதால் பிரதமர் இல்லம் அமைந்த ரேஸ் கோர்ஸ் சாலை உள்பட முக்கியச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அஜித் சிங் கேட்டுக் கொண்டதன் பேரில், அரசு பங்களாவின் சாவியை மத்திய பொதுப்பணித் துறையிடம் வழங்க வியாழக்கிழமை (செப்டம்பர் 25) வரை அவருக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் பங்களாவை காலி செய்யாமல் அதைக் கைப்பற்றும் நடவடிக்கையில் இறங்கியிருப்பதால் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் வாய்ப்புகளையும் மத்திய அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.