தமிழகத்தில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
மக்கள் நலப் பணியாளர்களுக்கு அக்டோபர் மாதத்துக்குள் மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்று அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனில் ஆர்.தேவ், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது. அப்போது, மக்கள் நலப் பணியாளர்கள் சார்பில் வழக்குரைஞர் வில்சன் ஆஜராகி வாதாடுகையில், "அரசுப் பணியை எதிர்பார்த்து மக்கள் நலப் பணியாளர்களின் இளமைக் காலம் வீணாகி விட்டது.
கடந்த 25 ஆண்டுகளாக இந்த வேலையை நம்பியே அனைவரும் இருந்தனர். இந்நிலையில், விரக்தி காரணமாக 26 பேர் தற்கொலை செய்து கொண்டனர். பசி, பட்டினி காரணமாக 126 பேரும் உயிரிழந்துள்ளனர். தற்போது, மது ஒழிப்புக்கு எதிராக தமிழக அரசு பிரசாரம் மேற்கொள்ள இவர்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எனவே, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி இவர்களுக்கு மாற்றுப் பணி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, தமிழக அரசு சார்பில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிடுகையில், "மக்கள் நலப் பணியாளர்களுக்கு போதிய கல்வித் தகுதி கிடையாது. மேலும், அவர்கள் தாற்காலிகமாகவே பணியில் நியமிக்கப்பட்டனர். எனவே, அவர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது. வேலை பார்க்காத நிலையில் அவர்களுக்கு அரசு சம்பளம் அளிக்காது. எனவே, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இவ்வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெறும். அப்போது, தமிழக அரசின் விளக்கத்துக்கு மக்கள் நலப் பணியாளர்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.
பின்னணி: தமிழகத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு திமுக தலைமையிலான ஆட்சியின் போது 13,500 பேர் மக்கள் நலப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், 2011-இல் ஆட்சிக்கு வந்த அதிமுக தலைமையிலான அரசு, இவர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பணியாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
இதில், மக்கள் நலப் பணியாளர்கள் அனைவருக்கும் மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு வழங்க முடியவில்லை எனில் ஆறு மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.