பாலியல் பலாத்கார வழக்கில், உடல்நிலையைக் காரணமாகக் கொண்டு, சாமியார் ஆஸாராம் பாபுவுக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது.
இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி டி.எஸ். தாக்குர் தலைமையிலான அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஸாராம் பாபு உடல்நிலையை பரிசோதித்து மருத்துவர்கள் அளித்த அறிக்கையை நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது நீதிபதிகள் தெரிவித்ததாவது:
ஆஸாராம் பாபுவின் உடல்நிலை சீராக இருப்பது தெரிகிறது. எனவே உடல் நிலையைக் காரணமாகக் கொண்டு அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டிய அவசியமில்லை.
உடல்நிலை மிகவும் மோசமடைந்தால் மட்டுமே, வெளியே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதிக்க முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து அந்த வழக்கு மீதான அடுத்த கட்ட விசாரணையை, அடுத்த மாதம் 14ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அன்றைய விசாரணையின்போது, வழக்கு தொடர்பான முக்கிய சாட்சிகளின் பெயர்களை தெரிவிக்க வேண்டும் என்றும் ராஜஸ்தான் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பின்னணி: குஜராத் மாநிலத்தின் சூரத், ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள பாலியல் பலாத்கார வழக்குகளில், சாமியார் ஆஸாராம் பாபு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.