கமல்ஹாசன், வைரமுத்து, வித்யா பாலனுக்கு பத்ம விருதுகள்

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, நடிகை வித்யா பாலன், தமிழகத்தைச் சேர்ந்த

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, நடிகை வித்யா பாலன், தமிழகத்தைச் சேர்ந்த ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல், கடம் வித்வான் டி.எச்.விநாயக்ராம் உள்பட 65 பேருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கௌரவித்தார்.

இதையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அசோகா மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் குடிமக்களுக்கான மிக உயரிய விருதாகக் கருதப்படும்  "பத்ம விபூஷண்' விருது, அறிவியல் விஞ்ஞானி டாக்டர் ஆர்.ஏ.மாஷேல்கருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, கடம் வித்வான் டி.எச். விக்கு விநாயக்ராம், சிகாகோவில் இந்திய வளர்ச்சிக்கான பல்வேறு அரசியல், சமூக வளர்ச்சிக்கான ஆய்வுக் கட்டுரைகளையும், படைப்புகளையும் வெளியிட்டு வரும் லாயிட் ஐ.ருடோல்ஃப், சூசன் எச்.ருடோல்ஃப் உள்பட 12 சாதனையாளர்களுக்கு "பத்ம பூஷண்' விருதும், பாராட்டுப் பத்திரமும் வழங்கி குடியரசுத் தலைவர் வாழ்த்தினார்.

பத்ம விருதுகள்: திரைப்பட நடிகை வித்யா பாலன், இந்திய கபடி மகளிர் அணி வீராங்கனை சுனில் தபஸ், தமிழகத்தைச் சேர்ந்த ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல், மூத்த விஞ்ஞானியும், மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை முன்னாள் செயலருமான ராமசாமி ஆர்.ஐயர், நாகாலாந்தைச் சேர்ந்த மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் பெண்  உறுப்பினர் பி.கிலெம்சுங்லா உள்பட 52 சாதனையாளர்களுக்கு பத்மஸ்ரீ விருதுகளை பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

1944-ஆம் ஆண்டில் பிறந்து கடந்த 45 ஆண்டுகளாக பார்வையற்றோருக்கான சுய உதவி இயக்கத்தை இந்தியாவிலும், சர்வதேச அளவில் உள்ள பார்வையற்றோர் நல அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை வகித்து வருபவருமான சமூக ஆர்வலர் ஜவாஹர் லால் கௌல், பத்மஸ்ரீ விருது பெற வந்திருந்தார். கண் பார்வையற்ற அவரைக் குடியரசுத் தலைவரின் மெய்க்காப்பாளர்கள் அழைத்து வந்தனர்.

அதைப் பார்த்ததும், பாதி தூரத்திலேயே அவர் இருக்கும் பகுதிக்குச் சென்று பத்மஸ்ரீ விருதை பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

விருது வழங்கும் நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கவிஞர் வைரமுத்து, வித்யா பாலன், கடம் வித்வான் விக்கு விநாயக்ராம், நடிகை கௌதமியுடன் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் சுஷில் குமார் ஷிண்டே, ப.சிதம்பரம், சரத் பவார், ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்று விருது பெற்ற சாதனையாளர்களை வாழ்த்தினர்.

முன்னதாக, தர்பார் மண்டபத்தில் நிகழ்ச்சி தொடங்கும் முன்பாக குடியரசுத் தலைவர் மாளிகையின் சிறப்புகளை பிரணாப் முகர்ஜியின் ஊடக ஆலோசகர் வேணு ராஜாமணி தொகுத்து வழங்கினார்.

2014-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளைப் பெற மொத்தம் 127 பேர் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் தற்போது 65 பேருக்கு மட்டும் விருது  வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் மூன்றாவது வாரம் நடைபெறும் நிகழ்ச்சியில் விருது வழங்கப்படும் என்று குடியரசுத் தலைவர் மாளிகை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com