3ஆவது கட்ட தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: கேரளம், ஹரியாணா -73%, உ.பி.- 65%, தில்லி-64%,

மக்களவைத் தேர்தலுக்கான 3ஆவது கட்டத் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தில்லியில் 64 சதவீதமும், ஹரியாணா, கேரளத்தில் 73 சதவீதமும், சண்டீகரில் 74 சதவீதமும், உத்தரப் பிரசேதத்தில் 65 சதவீதமும் வாக்குகள் பதிவாயின.
3ஆவது கட்ட தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: கேரளம், ஹரியாணா -73%, உ.பி.- 65%, தில்லி-64%,

மக்களவைத் தேர்தலுக்கான 3ஆவது கட்டத் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தில்லியில் 64 சதவீதமும், ஹரியாணா, கேரளத்தில் 73 சதவீதமும், சண்டீகரில் 74 சதவீதமும், உத்தரப் பிரசேதத்தில் 65 சதவீதமும் வாக்குகள் பதிவாயின.

மக்களவைக்கு கடந்த திங்கள்கிழமை (ஏப்ரல் 7) தொடங்கி, அடுத்த மாதம் 12ஆம் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் தில்லி, உத்தரப் பிரதேசம், ஒடிஸô, சத்தீஸ்கர், பிகார், மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம், கேரளம், ஜார்க்கண்ட்,ஜம்மு-காஷ்மீர், ஹரியாணா ஆகிய 11 மாநிலங்கள் மற்றும் சண்டீகர், அந்தமான் - நிகோபார், லட்சத்தீவு ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளில் வியாழக்கிழமை 3ஆவது கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

விறுவிறுப்பான வாக்குப்பதிவு: கடந்த மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடுகையில், 91 தொகுதிகளிலும் இம்முறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் அதிகளவில் வாக்களித்தனர். இதனால் அனைத்து தொகுதிகளிலும் கடந்த முறை பதிவான வாக்குகளை விட அதிகளவு வாக்குகள் பதிவாயின.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அண்மையில் கலவரம் பாதித்த முசாஃபர்நகர், ஷாம்லி தொகுதியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதேபோல் பிகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் தேர்தலை புறக்கணிக்கும்படி மாவோயிஸ்ட்டுகள் விடுத்திருந்த அழைப்பை புறக்கணித்து ஆர்வத்துடன் ஏராளமானோர் திரண்டு வந்து வாக்களித்தனர்.

தில்லி: தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வியாழக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் புது தில்லி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட நிர்மாண் பவன் வாக்குச்சாவடியில் காலை 9.30 மணியளவில் தங்களது வாக்கைப் பதிவு செய்தனர்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஒளரங்கசீப் சாலையில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார். ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி தனது கணவர் ராபர்ட் வதேராவுடன் லோதி எஸ்டேட் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், ராஜ்புரா சாலை வாக்குச் சாவடியிலும், தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கேஜரிவால் தனது மனைவி, தந்தை, தாயார் ஆகியோருடன் திலக் மார்க் வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் துக்ளக் கிரசென்ட் சாலையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

வழக்கமாக தேர்தலில் வாக்களித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசுவதை வழக்கமாக கொண்ட காங்கிரஸ், பாஜக மூத்த தலைவர்கள், இந்த முறை வாக்களித்த பிறகு, வாக்களித்ததற்காக கை விரலில் வைக்கப்பட்ட மையை உயர்த்திக் காட்டியபடி சென்றனர். அவர்களின் சார்பில் அவர்களது செய்தித் தொடர்பாளர்கள் மட்டுமே செய்தியாளர்களிடம் பேசினர்.

கேஜரிவால் நம்பிக்கை: அதேசமயம் தனது வாக்கினை பதிவு செய்து விட்டு செய்தியாளர்களிடம் அரவிந்த் கேஜரிவால் பேசுகையில், "இந்தத் தேர்தல் ஊழலுக்கு எதிரானது. தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடைபெறும் யுத்தம். இதில் தில்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்' என்றார்.

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் மகள் பிரதீபா புது தில்லி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும். பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடிதான், நாட்டின் அடுத்த பிரதமர். இதில் எந்த சந்தேகமும் கிடையாது' என்றார்.

பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்கரி, தாம் போட்டியிடும் நாகபுரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

சண்டீகரில் 74 சதவீதம்: தலைநகர் தில்லியில் 64 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த மக்களவைத் தேர்தலில் (52.3 சதவீதம்) பதிவான அளவை விட, இது 12 சதவீதம் அதிகமாகும்.

3ஆவது கட்டத் தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் சண்டீகரில் அதிக அளவாக 74 சதவீத வாக்குகள் பதிவாயின. 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் (64 சதவீதம் ) பதிவாகியிருந்ததை விட இது 10 சதவீதம் அதிகமாகும்.

உத்தரப்பிரதேசத்தில் 10 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 65 சதவீத வாக்குகள் பதிவாகின. முசாஃபர்நகரில் 67.78 சதவீதமும், ஷாம்லியில் 70.85 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. இது கடந்த மக்களவைத் தேர்தலில் பதிவானதை விட 14 சதவீதம் அதிகமாகும்.

கேரளத்தில் 73 சதவீதம்: கேரளத்தில் 73.2 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் காலையில் தொடங்கியது முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது. சிறுசிறு மோதல்களை தவிர பெரும்பாலும் தேர்தல் அமைதியாகவே நடைபெற்றது.

4 தொகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவின்போது, வரிசையில் நின்ற 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.

கேரளத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் மத்திய அமைச்சர்கள் சசி தரூர், கே.வி. தாமஸ், கொடிக்குன்னில் சுரேஷ், கே.ஸி. வேணுகோபால், முல்லப்பள்ளி ராமச்சந்திரன், இ.அகமது ஆகியோர் முக்கியமான வேட்பாளர்கள் ஆவர்.

ஒடிஸா: ஒடிஸô மாநிலத்தில் 10 மக்களவைத் தொகுதிகளுக்கும், 70 பேரவைத் தொகுதிகளுக்கும் வியாழக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் 67 சதவீத வாக்குகள் பதிவானதாக கூறப்படுகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 58 சதவீதமும், மத்தியப் பிரதேச மாநிலத்தில் 65 சதவீதமும், ஹரியாணா மாநிலத்தில் 73 சதவீதமும், ஜம்முவில் 66.29 சதவீதமும், அந்தமான் - நிகோபாரில் 67 சதவீதமும், லட்சத்தீவில் 71.34 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com