Enable Javscript for better performance
கட்டாய மத மாற்றப் புகார்: மீரட்டில் பதற்றம்- Dinamani

சுடச்சுட

    

    தனது மகளை சிலர் கடத்திச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு, கட்டாய மத மாற்றமும் செய்ததாக உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் போலீஸாரிடம் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

    இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கர்கோதா, அத்ராடா பகுதிகளில் இரு மதத்தினரிடையே திங்கள்கிழமை மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் மீரட் மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது.

    இது குறித்து மீரட் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.எஸ்.பேக் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

    கர்கோதா பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது 20 வயது மகளை, கர்கோதா கிராமத் தலைவர் நவாப் கான், மதகுரு சலாவுல்லா மற்றும் மூவர் சேர்ந்து கடந்த 23ஆம் தேதியன்று கடத்திச் சென்று ஒரு மதரஸாவில் அடைத்துவைத்து பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக ஞாயிற்றுக்கிழமை இரவு புகார் அளித்துள்ளார்.

    மேலும், தனது மகளை அவர்கள் மிரட்டி மதமாற்றம் செய்வதற்கான ஆவணங்களில் கையெழுத்து வாங்கியதாகவும் அந்தப் புகாரில் கூறியுள்ளார்.

    கடத்தியவர்களின் பிடியில் இருந்து ஜூலை 30ஆம் தேதி தப்பித்துவந்த அந்தப் பெண், தனக்கு நிகழ்ந்த துயரத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணிடம் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதியாகியுள்ளது. உடலில் காயங்களும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கத் தவறிய கர்கோதா காவல் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மீரட் மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் இருக்கக் கூடுதலாகப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமை கட்டுக்குள் உள்ளது என்று பேக் கூறினார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கர்கோதா, அத்ராடா பகுதிகளில் இரு மதத்தினரிடையே திங்கள்கிழமை மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் மீரட் மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது.

    இந்நிலையில், மீரட் மாவட்ட ஆட்சியர் பங்கஜ் யாதவ் கூறியதாவது:

    மதகுரு  சலாவுல்லாவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஹாபூட் பகுதியில் கோட்டாட்சியர் நீதி விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் விசாரித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பங்கஜ் யாதவ் கூறினார்.

    இதனிடையே, பாலியல் துன்புறுத்தல் மற்றும் மதமாற்றம் செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து மீரட் ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக உத்தரப் பிரதேச மாநில பாஜகவின் வணிகர்கள் பிரிவுத் தலைவர் வினீத் அகர்வால் சாரதா தலைமையில் அந்தக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது செய்தியாளரிடம் சாரதா பேசுகையில், இந்தச் சம்பவம் தொடர்பாக ஆளும் சமாஜவாதி கட்சி அரசும், போலீஸாரும் நடவடிக்கை எடுக்காமல் தயங்குகின்றனர்.

    இதில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யத் தவறினார்கள் என்றால் மாநிலம் தழுவிய கடையடைப்பில் வணிகர்கள் ஈடுபடுவார்கள் என அரசை எச்சரிக்கிறேன் என்றார். இந்தப் பிரச்னையில் காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று பாஜக எம்.பி. ராஜேஷ் குமார் அகர்வாலும் கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai