Enable Javscript for better performance
இன்னுமா வாக்கு வங்கி அரசியல்?- Dinamani

சுடச்சுட

  

  இன்னுமா வாக்கு வங்கி அரசியல்?

  By dn  |   Published on : 10th August 2014 04:55 AM  |   அ+அ அ-   |  

  narendramodi

  தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் இன்னமும் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். காங்கிரஸ், சமாஜவாதி கட்சிகளை மறைமுகமாகக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு விமர்சித்தார்.

  உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற கலவரங்களின் பின்னணியில் பாஜக இருப்பதாக சமாஜவாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குறைகூறின. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடந்த சில தினங்களுக்கு முன் மக்களவையில் பேசுகையில், "உத்தரப்பிரதேச கலவரம் செயற்கையாக, திட்டமிட்டு உருவாக்கப்பட்டது' என்று குற்றம்சாட்டினார்.

  இந்நிலையில், தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக தேசியக் கவுன்சில் கூட்டத்தில் மோடி பேசுகையில், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளித்தார். அவர் பேசியதாவது:

  நாட்டில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்களை பாஜக எப்போதும் ஏற்றுக் கொள்வதில்லை. முன்னேற்றத்துக்கு அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவை அடிப்படைத் தேவைகளாகும். இதில் எந்தச் சமரசமும் செய்து கொள்ளப்படாது. மக்களவைத் தேர்தலில் மாபெரும் தோல்வியைச் சந்தித்தவர்களால் (காங்கிரஸ், சமாஜவாதி கட்சிகள்) இன்னமும் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடாமல் இருக்க முடியவில்லை. சமூகக் கட்டமைப்புக்கு இடையூறு ஏற்படுத்தும் நடவடிக்கையில் அவர்கள் இறங்கியுள்ளனர்.

  இந்த நேரத்தில், நாடு முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற நோக்கில், மத ஒற்றுமையையும், தேச ஒற்றுமையையும் உறுதிப்படுத்துவதற்கு பாஜக தொண்டர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டியுள்ளது. நாடு முன்னேற்றம் அடையும்போது அதன் 125 கோடி மக்களும் முன்னேறுவார்கள். எனது அரசின் செயல்பாடுகளை மதிப்பிட மாறுபட்ட, கடினமான அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு ஏன் நடக்கிறது என்பது எனக்குத் தெரியாது. அதற்குக் காலம்தான் பதிலளிக்கும். ஆனால், நாம் இந்தச் சவாலை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

  எங்களை கடுமையான அளவுகோலால் மதிப்பிடுவது எங்களுக்கு நல்லதுதான். அந்தச் சோதனையில் நாம் வெற்றி பெறுவோம். நானே தனிப்பட்ட முறையில் 14 ஆண்டுகால விசாரணையில் இருந்து (குஜராத் கலவரம் தொடர்பான வழக்கு) வெளிவந்துள்ளேன்.

  மக்கள் வாக்குரிமை மூலம் தங்கள் தீர்ப்பை அளித்துள்ளனர். இப்போது நமது கடமையைச் செய்ய வேண்டிய நேரம் இது. மக்களின் விருப்பங்கûளையும், எதிர்பார்ப்புகளையும் நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம்.

  கடந்த 60ஆண்டுகளாக எதையும் செய்யாதவர்கள் (காங்கிரஸார்), தற்போது எங்கள் அரசின் 60 நாள் ஆட்சி குறித்துக் கேள்வி எழுப்புகின்றனர். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த 60 நாள்களுக்குப் பிறகு பல்வேறு விஷயங்களும் மாறத் தொடங்கி விட்டன. மாற்றத்தைக் கொண்டு வருவதில்

  நாம் வெற்றிகரமாகச் செயல்படுவோம். நம் மீதே நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். கடினமான சூழ்நிலைகளைக் கண்டு அடிபணிந்துவிட மாட்டோம்.

  மத்திய அரசுப் பொறுப்பில் 60 நாள்களாக இருந்து பார்த்ததில் நிர்வாக விஷயங்களை நன்கு புரிந்து கொண்டேன். மிகப்பெரிய பணிகளைச் செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

  பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளதால், இந்தியாவைக் குறித்த உலகின் கண்ணோட்டம் மாறியுள்ளது. இது அந்த நாடுகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவுக்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்திருக்கும் உண்மையை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும்.

  தேர்தலுக்கு முன்பு, "குஜராத்துக்கு வெளியே மோடியைப் பற்றி யாருக்காவது தெரியுமா?' என்று கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால், நமக்கு வெற்றியை அளிக்கும் மனநிலையில் இருந்த மக்கள் அதை நமக்கு அளித்து விட்டனர். தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பு, தில்லியைக் குறித்தோ, நாடாளுமன்றத்தைக் குறித்தோ எனக்கு ஓரளவுதான் தெரியும். ஆனால், ஆட்சியமைத்து 60 நாள்களுக்குப் பிறகு, மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.

  தேர்தல் பிரசாரத்தின் தொடக்கத்தில், "பாஜகவுக்கு 300 இடங்கள் கிடைக்க வேண்டும்' என்று நான் கூற ஆரம்பித்தேன். அப்போது எனது சகாக்களில் சிலர் "கட்சிக்கு கிடைக்கக் கூடிய இடங்கள் குறித்து நான் ஏன் பேச வேண்டும்?' என்று கேட்டனர். ஆனால், பாஜகவுக்கு வாக்களிப்பது என்று மக்கள் தங்கள் மனத்தில் முடிவு செய்துவிட்டதை நான் உணர்ந்தேன். எரிசக்திப் பாதுகாப்பு, கழிப்பறைகள், பெண் குழந்தைகளின் கல்வி போன்ற சமூக விஷயங்களை மேம்படுத்த இனி ஒவ்வோர் ஆண்டையும் பாஜக அர்ப்பணிக்க வேண்டும் என்றார் மோடி.

  ஆட்ட நாயகன் அமித் ஷா!

  மக்களவைத் தேர்தலில், பாஜகவின் வெற்றிக்கு கட்சித் தலைவர் அமித் ஷா ஆற்றிய பணிகளை பாராட்டியுள்ள மோடி, அவரை ஆட்ட நாயகன் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

  இதுதொடர்பாக மோடி பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் பேசுகையில், "தேர்தலுக்கு பிறகு நடைபெறும் கட்சியின் முதல் தேசிய கவுன்சில் கூட்டம் இது. இந்த வெற்றிக்காக பல கோடி கட்சித் தொண்டர்கள் பணியாற்றினர்.

  ராஜ்நாத் சிங், அணியின் கேப்டன். அவரது தலைமையின் கீழ், வெற்றியை கட்சித் தொண்டர்கள் சாதித்துள்ளனர். இதில், ஆட்ட நாயகன், அமித் ஷா ஆவார். அவரை நான் நன்கு அறிவேன். அவருக்கு எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும், அதைத் திறம்பட சாதித்துக் காட்டுவார். தற்போது வழங்கப்பட்டுள்ள பொறுப்பையும் அவர் திறம்படக் கையாளுவார் என உறுதியாக நம்புகிறேன்' என்றார் மோடி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai