போபால் விபத்து - நடந்ததும் நடப்பதும்!

முப்பது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால், இன்றுவரை மீதைல் ஐசோ சயனேட் வாயுவால் தாக்கப்பட்டால் அதற்குச் சரியான மாற்று மருத்துவம் என்ன என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.

3. விஷமும் விஷமங்களும்!

முப்பது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால், இன்றுவரை மீதைல் ஐசோ சயனேட் வாயுவால் தாக்கப்பட்டால் அதற்குச் சரியான மாற்று மருத்துவம் என்ன என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த இடைவெளியில், டஜன் கணக்கில் மருத்துவர்களும், மருந்து ஆராய்ச்சியாளர்களும், போபாலுக்கு வந்து போய்விட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டனர். பல மருத்துவ மாநாடுகளும், கருத்தரங்கங்களும் நடைபெற்றுவிட்டன.

பல மருத்துவர்கள் போபாலிலிருந்து மாதிரிகளைப் பரிசோதனைக்குத் தத்தம் நாடுகளுக்கு எடுத்துச் சென்றார்கள். பரிசோதனை நடத்தி மாற்று மருந்து கண்டுபிடிக்கிறோம் என்று தொடர்ந்து ஆய்வுகள் செய்கிறார்கள். வெளிநாடுகளில் இதுகுறித்து நடைபெறும் அளவுக்குக்கூட இந்தியாவில் ஆய்வுகளோ, சோதனைகளோ நடைபெறவில்லை என்பதுதான் நடைமுறை உண்மை.

விபத்து நடந்து இரண்டு நாள்களுக்குப் பிறகுதான் சற்று தெளிவே பிறந்தது. அதற்குள் போபால் நகரமே பிணவாடையால் திணறத் தொடங்கிவிட்டிருந்தது. மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. மருத்துவர்களோ என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்தனர்.

ஆயிரக்கணக்கான நோயாளிகளை எதிர்கொள்ளும் அளவுக்கு மருத்துவப் பணியாளர்களோ, மருத்துவ வசதிகளோ போபாலில் அப்போது இல்லை. முறையான பட்டம் பெறாத பயிற்சி மருத்துவர்கள்தான் 70% மருத்துவர்கள். ஆங்காங்கே தாற்காலிக மருத்துவக் கூடங்கள் அமைக்கப்பட்டன. விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 32 சிறப்பு வார்டுகளும் நிறுவப்பட்டன.

விஷவாயுவால் பாதிக்கப்பட்டதாக சிகிச்சை பெற்ற 5,20,000 பேரில் 2,00,000 பேர் 15 வயதுக்கும் குறைவான குழந்தைகள். 3,000 பேர் கர்ப்பிணிகள்.

இறந்தவர்களின் எண்ணிக்கை 2,259 என்று அதிகாரப்பூர்வமாக முதலில் அறிவிக்கப்பட்டது. 1991-இல் இந்த அதிகாரப்பூர்வ எண்ணிக்கை திருத்தப்பட்டு 3,928 என்று அறிவிக்கப்பட்டது. மத்தியப் பிரதேச அரசின் விஷவாயுத் தாக்குதலில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை பற்றிய இன்னொரு குறிப்பில் அதுவே 3,787 என்று காணப்படுகிறது. இன்கிரிட் எக்கர்மான் என்பவரின் கணக்குப்படி விஷவாயுக் கசிவு ஏற்பட்ட இரண்டு வாரங்களுக்குள் மடிந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 8,000.

விஷவாயுவால் பாதிக்கப்பட்ட பகுதியில் வாழ்ந்தவர்கள் ஏறத்தாழ 7 லட்சம் பேர். 2006-இல் அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதிவின்படி, பாதிக்கப்பட்டவர்கள் 5,58,125. தாற்காலிக பாதிப்புக்கு உள்ளானவர்கள் 34,478. நிரந்தர ஊனம், கடுமையான பாதிப்புக்கு உள்ளானவர்கள் 3,900. இன்றுவரை, எத்தனை பேர் இறந்தனர், எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பதற்கான முறையான, முழுமையான புள்ளிவிவரம் சேகரிக்கப்படவில்லை, வெளியிடப்படவில்லை என்பதுதான் உண்மை நிலை.

1984 டிசம்பர் 4-ஆம் தேதி முதல் கூட்டு சிதையூட்டு ஆங்காங்கே தொடங்கியது. மனிதர்கள் மட்டுமல்ல, மிருகங்களும்கூட விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டன. ஏறத்தாழ 2,000 மாடுகள், எருதுகள், ஆடுகள் தொடங்கி இன்னபிற பிராணிகளின் சடலங்கள் தேடி எடுக்கப்பட்டு எரியூட்டப்பட்டன. அப்படி எரியூட்டப்பட்டு, எழுந்த புகையை சுவாசித்து அதனால் பாதிப்புக்கு உள்ளான ராணுவத்தினரும், காவல் துறையினரும், தன்னார்வத் தொண்டர்களும் பலர் என்றால் விஷவாயுவின் தாக்கம் எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு உயிர் வாழ்பவர்கள் அனைவருமே கண் பார்வை மங்கியும், நுரையீரல் பழுதடைந்தும்தான் காணப்படுகிறார்கள். பலர் பார்வையை முற்றிலுமாக இழந்து விட்டிருக்கிறார்கள். போதாக்குறைக்கு மூட்டு வலியும், அடிக்கடி ஏற்படும் நெஞ்சு வலியும் அவர்களை வாழவும் விடாமல் மரிக்கவும் விடாமல் துன்புறுத்துகின்றன.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மட்டுமல்ல, அவர்களது பெண் குழந்தைகளுக்கும் சரி, குறைப்பிரசவ விகிதம் 300%-மாகவும், சிசு மரணம் 200%-மாகவும் அதிகரித்திருக்கிறது. அதுமட்டுமல்ல, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளில் பெரும்பான்மையானவர்கள் உடல் ஊனமுற்றவர்களாகவும், மூளை வளர்ச்சி குறைந்தவர்களாகவும், கண் பார்வை அற்றவர்களாகவும், பிறவியிலேயே காசநோய், மூச்சிரைப்பு போன்ற நுரையீரல் தொடர்பான நோயுடனும் பிறக்கின்றன என்பதுதான் எல்லாவற்றையும்விடப் பெரிய சோகம். ஏறத்தாழ 1,20,000 முதல் 1,50,000 வரையிலானவர்கள், விஷவாயுக் கசிவின் பாதிப்புகளுடன் இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றனர் என்கிறது ஓர் அறிக்கை.

விபத்து நடந்த இரண்டாவது நாளே உடனடி நிவாரணங்களும், இழப்பீடும் தரப்பட்டன. எல்லோருக்கும் குடும்ப அட்டைகள் தரப்பட்டு உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன. 1984 டிசம்பர் மாதம் நடந்த விபத்துக்கு, 1985 ஜூலை மாதம் மத்தியப் பிரதேச அரசு 87 கோடி ரூபாய் நிவாரணத்திற்காக ஒதுக்கீடு செய்தது. ஆரம்பத்தில் 200 ரூபாயும், பிறகு 750 ரூபாயும் விதவைகளுக்கு மாதாந்திர நிவாரணமாக அளிக்கப்பட்டன. அதேபோல, தொடக்கத்தில் குடும்பத்திற்கு மாதம் ரூ.1,500 என்று தரப்பட்டு, பிறகு விபத்துக்கு முன்னால் பிறந்த பெரியவர், சிறியவர் யாராக இருந்தாலும் தலைக்கு ரூ.200 என்கிற அளவில் மாதாந்திர நிவாரணம் வழங்கப்பட்டது. இதெல்லாம் அன்றாட வாழ்க்கைக்கே போதாது எனும்போது, அவர்கள் மருத்துவச் செலவுக்கு எங்கே போவார்கள்?

விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணத் தொகை பெறுவதற்கும், மீண்டும் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கும் மட்டுமா போராடினார்கள்? கண் பார்வை இல்லாமல், மூச்சுத் திணறலுடன் மருத்துவ சிகிச்சைக்காகவும் பேராடினார்கள். அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லை. அரசு அமைத்த சிறப்பு மருத்துமனையின் செயல்பாடும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.

1984-இல் நடந்த விபத்துக்கு 1997-இல் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு விடிவுகாலம் வந்தது. யூனியன் கார்பைட் இந்தியா லிமிடெட் என்கிற நிறுவனத்தில் தனக்கு இருக்கும் பங்குகளை யூனியன் கார்பைட் லிமிடெட் என்கிற அமெரிக்கத் தாய் நிறுவனம் விற்க முடிவு செய்தபோது, உச்சநீதிமன்றம் தலையிட்டது. விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க 500 கட்டில்கள் கொண்ட சிறப்பு மருத்துவமனை நிறுவி, எட்டு ஆண்டுகளுக்கு இலவச சிகிச்சை தர வேண்டும் என்று உத்தரவிட்டது.

350 கட்டில்களுடனான போபால் நினைவு மருத்துவமனையும் ஆராய்ச்சி மையமும் 1998-இல் செயல்படத் தொடங்கியது. எட்டு இடங்களில் புறநோயாளிகள் பரிசோதனைக்கான துணை மருத்துவமனைகளும் நிறுவப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு இலவச மருத்துவ சேவை அளிப்பதுடன் யூனியன் கார்பைட் நிறுவனத்தின் கடமை முடிந்தது. பாதிக்கப்பட்டவர்களும், அவர்களுடைய வாரிசுகளும் இப்போது என்ன செய்கிறார்கள் என்று கேட்டுவிடக் கூடாது. அந்த அவலத்தை விவரிக்கும் மனத்திண்மை இந்தக் கட்டுரையாளருக்கு இல்லை.

விஷவாயுத் தாக்குதலில் குறைவான பாதிப்பு, அதிகப் பாதிப்பு என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது. ரத்தத்தில் விஷவாயு கலந்துவிடும்போது அதனால் எந்த உறுப்புகளெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது காலப்போக்கில்தான் தெரியும். பிறக்கும் குழந்தைகள் மட்டுமல்ல, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும்கூட பாதிப்பு காணப்படுகிறது என்பதிலிருந்தே விஷவாயுத் தாக்குதலின் தீவிரத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

உயிர் பிழைத்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் "தாற்காலிகப் பாதிப்புக்கு உள்ளானவர்கள்' என்று அரசால் வகைப்படுத்தப்பட்டுள்ளதே தவிர, "நிரந்தரமாக அல்லது தாற்காலிகமாக ஊனமுற்றவர்கள்' என்று குறிப்பிடப்படவில்லை. இதற்கு மருத்துவர்களும், அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருந்தார்கள். இதனால், விபத்தைத் தொடர்ந்து யூனியன் கார்பைட் நிறுவனத்துடன் 1985-இல் செய்து கொள்ளப்பட்ட உடனடி நிவாரண ஒப்பந்தப்படி, மிகக் குறைவான உடனடி இழப்பீடு மட்டுமே வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் போராடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மரணமடைந்தவர்களுக்கு 20 லட்சம் ரூபாயும், தொழிற்சாலைக்கு அருகில் வசித்ததால் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு 16 லட்சம் ரூபாயும், ஏனையோருக்கு 6 லட்சம் ரூபாயும் இழப்பீடு தரப்பட வேண்டும் என்று போராடின.

ஆனால், பெரும்பான்மையானவர்களுக்கு வெறும் ரூ.25,000-த்திலிருந்து ரூ.50,000 வரைதான் இழப்பீடு கிடைத்து. 6% பேர்களுக்குத்தான் முறையான பரிசோதனைகள் நடத்தப்பட்டு 2 லட்சம் ரூபாய் வரை நிவாரணம் தரப்பட்டது. 94% பேர்கள் "தாற்காலிகப் பாதிப்பு' என்று வகைப்படுத்தப்பட்டு சொற்பமான இழப்பீடு கொடுத்து அனுப்பப்பட்டுவிட்டனர். அதாவது கிடைத்ததே என்று வறுமையில் வாடும் அவர்கள் கைநாட்டுப் போட்டு அதைப் பெற்றுக் கொண்டனர்.

பாதிக்கப்பட்ட ஏறத்தாழ 12 லட்சம் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க இரண்டே இரண்டு அறுவைச் சிகிச்சை அறைகளும் மூன்று அறுவைச் சிகிச்சை மருத்துவர்களும்தான் இருந்தனர் என்றால், நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

விஷவாயு தாக்கிய கர்ப்பிணிப் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் உடல் வளர்ச்சியும், மனவளர்ச்சியும் குன்றியவர்களாகவும், நுரையீரல் பாதிப்படைந்தவர்களாகவும் பிறக்கின்றனர். ஆனால், விஷவாயுவால் பாதிக்கப்பட்டால் அப்படிப்பட்ட பின் விளைவுகள் இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்று கூறி, அரசு அந்தக் குழந்தைகளுக்கு இழப்பீடு தர மறுத்துவிட்டது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்தான் அந்தக் குழந்தைகளின் சிகிச்சைக்கு உதவி வருகின்றன.

போபால் விஷவாயு விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காகவும், உரிமைக்காகவும் போராடுவதாகக் கூறிப் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் களமிறங்கின. இவர்களது முயற்சியால்தான் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பல சலுகைகளும், மருத்துவ உதவிகளும் கிடைத்தனவே தவிர, அரசின் தலையீட்டால் அல்ல. இனி, விஷவாயு விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதி கேட்டு நடத்தப்பட்ட நெடும்பயணத்தைப் பற்றிப் பார்ப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com