போபால் விபத்து - நடந்ததும் நடப்பதும்!

விஷவாயு விபத்து நிகழ்ந்ததைத் தொடர்ந்து யூனியன் கார்பைட் நிறுவனம், அமெரிக்க அரசு, இந்திய அரசு, போபால் நகர அமைப்பு, பாதிக்கப்பட்டவர்கள் ஆகிய ஐந்து தரப்பினரும் சம்பந்தப்பட்ட நீதிமன்ற நடைமுறைகள் தொடங்கின.

4. நீதி கேட்டு நெடும்பயணம்!

விஷவாயு விபத்து நிகழ்ந்ததைத் தொடர்ந்து யூனியன் கார்பைட் நிறுவனம், அமெரிக்க அரசு, இந்திய அரசு, போபால் நகர அமைப்பு, பாதிக்கப்பட்டவர்கள் ஆகிய ஐந்து தரப்பினரும் சம்பந்தப்பட்ட நீதிமன்ற நடைமுறைகள் தொடங்கின. மார்ச் 1985-இல் "போபால் விஷவாயுக் கசிவுச் சட்டம்' ஒன்றை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நிவாரணம் பெறத் தன்னைத்தானே நியமித்துக்கொண்டது. யூனியன் கார்பைட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் தொடங்கின.

11 ஆண்டுகளுக்குப் பிறகு, மார்ச் 1996-இல் யூனியன் கார்பைட் நிறுவனம் 350 மில்லியன் டாலர்கள் (அன்றைய கணக்குப்படி சுமார் ரூ.1,750 கோடி) இழப்பீடு வைப்புத் தொகையாக அளிக்கத் தயாராக இருப்பதாக, அமெரிக்க நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால், அமெரிக்க நீதிமன்ற நீதிபதி அந்த வழக்கை இந்திய நீதிமன்றங்களில்தான் தொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துவிட்டார். மேல்முறையீடு செய்யப்பட்டது.

அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் ஜனவரி 1987-இல் மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்தியது. "யூனியன் கார்பைட் இந்தியா லிமிடெட்' என்பது இந்தியர்களால், இந்தியர்களின் நிர்வாகத்தில் நடத்தப்படும் தனி நிறுவனம் என்றும், அதனால் வழக்கு இந்தியாவில்தான் நடத்தப்பட வேண்டும் என்று கூறி மேல்முறையீட்டை அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.

யூனியன் கார்பைட் நிறுவனம் அளிக்க முன்வந்த 350 மில்லியன் டாலர் இழப்பீடு ஒப்பந்தத்தை இந்திய அரசு நிராகரித்தது. 3,300 கோடி டாலர்கள் இழப்பீடு கேட்டது இந்திய அரசு. இரண்டு தரப்பும் ஏதாவது ஒரு சுமுகமான உடன்பாட்டுக்கு வரும்படி 1988 நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது.

இந்தியா கோரியிருந்த மூன்று பில்லியன் டாலரில் 15% தொகையான 479 மில்லியன் டாலரை இழப்பீடாகத் தருவதாக யூனியன் கார்பைட் கூறியது. அதை இந்திய அரசும் ஒத்துக் கொண்டது. உடனடியாக அந்தத் தொகையை அளித்துத் தனது கடமையைக் கை கழுவியது யூனியன் கார்பைட்!

இதற்குப் பிறகு வழக்குகள், மேல்முறையீடுகள், போராட்டங்கள் என்று நீதி கேட்டு பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நீதிமன்றப் படி ஏறி இறங்கியதுதான் மிச்சம்.

2010 ஜூன் மாதம் போபால் நீதிமன்றத்தில், விஷவாயுக் கசிவு தொடர்பான குற்றவியல் வழக்கில் தீர்ப்பு வெளியானது. இந்த வழக்கில் குற்றவாளிகளான யூனியன் கார்பைட் இந்தியா நிறுவனத்தின் செயல் தலைவர் கேசவ் மகிந்திரா, நிர்வாக இயக்குநர் வி.பி.கோகலே உள்ளிட்ட எட்டு பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி, அதே நேரத்தில் அவர்கள் பிணையில் செல்லவும், மேல் முறையீடு செய்யவும் அனுமதித்தது அந்த நீதிமன்றம். அதே நாளில் அடுத்த சிலமணி நேரங்களில் அவர்கள் நீதிமன்றத்திலிருந்து வீடு திரும்பினர். மேல்முறையீடு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.

இப்படி ஒரு தீர்ப்பளித்ததற்காக போபால் நீதிமன்ற நீதிபதி மோகன் பி.திவாரியைக் குறைசொல்லி எந்தப் பயனும் இல்லை. அவர்முன் வைக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்துமே பலமில்லாத, உறுதிப்படுத்தப்பட முடியாத, துடைத்தழிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மட்டுமே. மத்தியப் புலனாய்வுத் துறை பதிவு செய்திருந்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் வழக்கை விசாரிக்கும் நீதிபதி யாராக இருந்தாலும் இப்படித்தான் தீர்ப்பு வழங்கியிருக்க முடியும்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி பி.ஆர்.லால், தங்களை அன்றைய அரசு முறையாகவும் முழுமையாகவும் செயல்பட அனுமதிக்காததால்தான் இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்று பகிரங்கமாகவே குற்றம்சாட்டி இருக்கிறார்.

சாதாரணமாக ஒரு கட்டடம் இடிந்து விழுந்து சிலர் இறந்துபோனாலும்கூட, கட்டடம் கட்டும் ஒப்பந்தக்காரரைக் கைது செய்வார்களா இல்லை மேஸ்திரி, சித்தாள்களைக் கைது செய்வார்களா? யூனியன் கார்பைட் நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சன் பற்றி அந்தத் தீர்ப்பில் ஒரு வார்த்தைகூட இல்லை. வாரன் ஆண்டர்சன் மட்டுமல்ல, யூனியன் கார்பைட் நிறுவனத்தை வாங்கிய டௌ கெமிக்கல்ஸ் நிறுவனமும் இந்திய நீதிமன்றத்தின் அழைப்பாணையை (சம்மன்ஸ்) எள்ளளவும் சட்டையே செய்யவில்லை. முப்பது ஆண்டுகளாகியும் இன்னும் யூனியன் கார்பைட் அதிகாரிகளின் மேல்முறையீடு நீதிமன்றத்தில் நடக்கிறது என்றால் அது நீதித் துறையின் குற்றமா அல்லது அரசின் குற்றமா?

போபால் நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த சில மணி நேரத்தில், அமெரிக்க யூனியன் கார்பைட் நிறுவனம் ஓர் அறிக்கையை வெளியிட்டது. தன்னைக் குற்றவாளியாக விசாரிக்க இந்திய அரசுக்கு அதிகார வரம்பு இல்லை என்றும், எப்போது சமரசத் திட்டத்தின்படி இந்திய அரசுக்கு விபத்துக்கான இழப்பீட்டை அளித்துவிட்டோமோ அப்போதே எங்களுக்கும் இந்த விபத்து வழக்குக்குமான தொடர்பு முடிந்துவிட்டது. தொழிற்சாலையைச் சரியாக நிர்வகிக்காத அதிகாரிகள் மீதுதான் இப்போதைய வழக்கு என்பதுதான் அந்த அறிக்கையின் சாராம்சம்.

1991இல் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் மத்திய அரசுக்கும், அமெரிக்க யூனியன் கார்பைட் நிறுவனத்திற்கும் இடையில் இழப்பீடு ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஊடகங்களில் பரவலாக விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. போபால் விஷவாயுத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் போராட்டங்களும், நாடு தழுவிய அளவில் விழிப்புணர்வுக் கருத்தரங்கமும் நடத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து, 1991இல் பிரச்னையைத் திசைதிருப்புவதற்காகவும், போராடும் பாதிக்கப்பட்டவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவும் போபால் மாநகராட்சி நிர்வாகம் 1991இல் வாரன் ஆண்டர்சன் மீது குற்றவியல் வழக்கொன்றைத் தொடுத்தது. விபத்து நிகழ்ந்தது 1984இல். யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருந்த வாரன் ஆண்டர்சன் இந்தியாவுக்கு வந்து, சிறைபிடிக்கப்படாமல் அமெரிக்காவுக்குத் தப்பிச்செல்ல வழிகோலப்பட்டு, அவர் பணி ஓய்வு பெற்றது 1986இல். அவர் மீது போபால் நிர்வாகம் 1991இல் வழக்குத் தொடுக்கிறது.

வாரன் ஆண்டர்சன் மீது உயிர்ப் படுகொலைக்காக (Manslaughter) வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இதற்கு அதிகபட்சத் தண்டனை பத்தாண்டு சிறைவாசம். மனிதக் கொலைக்கான அந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான வாரன் ஆண்டர்சன் ஆஜராகாததால், அவரைத் தப்பியோடிவிட்டவர் என்று போபால் குற்றவியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி 1991 பிப்ரவரி ஒன்றாம் தேதி அறிவித்தார். அவரை அமெரிக்காவிலிருந்து அழைத்துவர ஆள் கொணர்வுப் பணியை முடுக்கிவிடும்படி இந்திய அரசுக்கு போபால் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அமெரிக்காவும் சரி, அமெரிக்க நீதித் துறையும் சரி இதைச் சட்டை செய்யவே இல்லை. இந்தியாவில் நடந்த விபத்துக்கு அமெரிக்க நீதிமன்றங்களில் நியாயம் கேட்க முடியாது என்று தெளிவாகவே கூறிவிட்டது. 1999இல் சாஹு என்பவர் யூனியன் கார்பைடுக்கும், வாரன் ஆண்டர்சனுக்கும் எதிராக, போபால் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீரில் ஏற்பட்டிருக்கும் மாசைப் போக்கவும், மருத்துவ வசதிகளைச் செய்து தரவும் கோரி ஒரு வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கையும் அமெரிக்க நீதிமன்றங்கள் நிராகரித்தன.

போபால் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, மத்திய அரசு 2010 ஜூன் மாதம் நிவாரணத் தொகையை உயர்த்தி அளிப்பதாக அறிவித்தது. அதன்படி, போபால் விஷவாயுவால் இறந்த குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும், நிரந்தரமாக ஊனமுற்றவர்களுக்கு ரூ.5 லட்சமும், ஓரளவுக்கு ஊனமுற்றவர்களுக்கு ரூ.3 லட்சமும் அளிக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சரவையின் அமைச்சர்கள் குழு பரிந்துரைத்திருந்தது. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் விஷவாயு தாக்கியதால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு ரூ.10 லட்சம் தருகிறது என்கிற செய்திதான் தெரியுமே தவிர, இதில் மறைந்திருக்கும் போலித்தனம் தெரியாது.

விபத்தில் மரணமடைந்தோரின் குடும்பத்தினர் என்று பார்த்தால் அவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். கடுமையான விஷவாயுத் தாக்குதலுக்கு உள்ளான குடும்பங்களில் தப்பிப்பிழைத்தவர்கள் சிலர் மட்டுமே. அவர்களும் அடுத்த சில வாரங்களில் இறந்துவிட்டனர். இறந்தவர்களின் குடும்பத்தினர் என்று போலியாகப் பலருக்கு உடனடி நிவாரணம் வழங்கப்பட்டது என்பது வெளியில் வராத பல செய்திகளில் ஒன்று.

நிரந்தர ஊனமுற்றோர், ஓரளவு ஊனமுற்றோருக்கான நிவாரணத் தொகையை அளிப்பதிலும்கூட, ஒருவித ஏமாற்று காணப்பட்டது. அதாவது, ஏற்கெனவே ஒருவர் பெற்ற நிவாரணத் தொகையைக் கழித்துக்கொண்டு மீதியைக் கொடுப்பது என்பதும், அவரால் ஏற்கெனவே பெற்ற நிவாரணத் தொகைக்கான ஆதாரங்களை அவர்கள் தந்தால்தான் நிவாரணம் பெற முடியும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் பெரும்பாலானவர்களுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்கவில்லை.

மொத்தத்தில், விஷவாயுத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டார்கள், அதற்குக் காரணமானவர்கள் தப்பித்தார்கள், இதற்கு அரசும் அதிகார வர்க்கங்களும் துணை நின்றன.

இதெல்லாம் முடிந்த கதை. இன்றைய நிலைமை என்ன என்பதை அடுத்து பார்ப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com