போபால் விபத்து - நடந்ததும் நடப்பதும்!

போபால் விஷவாயு விபத்து எழுப்பும் மிக முக்கியமான கேள்வி இழப்பீடு பற்றியதுகூட அல்ல. ஏறத்தாழ 18,000 டன் நச்சுக் கழிவு இந்திய மண்ணில் அகற்றப்படாமல் புதைந்து கிடக்கிறதே, அதுதான் மிகப்பெரிய பிரச்னை.

6. வெடிக்கக் காத்திருக்கும் எரிமலை!

போபால் விஷவாயு விபத்து எழுப்பும் மிக முக்கியமான கேள்வி இழப்பீடு பற்றியதுகூட அல்ல. ஏறத்தாழ 18,000 டன் நச்சுக் கழிவு இந்திய மண்ணில் அகற்றப்படாமல் புதைந்து கிடக்கிறதே, அதுதான் மிகப்பெரிய பிரச்னை.

ஒருபுறம் போபால் பூச்சிமருந்துத் தொழிற்சாலையிலிருந்து நச்சுக் கழிவுகளை வெளியேற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அத்தனையும் தோல்வி அடைந்தன. இன்னொருபுறம், யூனியன் கார்பைட் நிறுவனத்தை வாங்கிவிட்டிருந்த "டெü' கெமிக்கல்ஸ் நிறுவனத்தை அந்த நச்சுக் கழிவுகளை அகற்றுவதற்கான பொறுப்பையோ அல்லது செலவையோ ஏற்றுக்கொள்ளும்படி போராடியும், மன்றாடியும், வழக்காடியும் பார்த்தும் எந்தவித பயனும் கிடைக்கவில்லை.

இதற்கிடையில், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. 1989-இல் போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய 470 மில்லியன் டாலர் இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்பட வேண்டும் என்பதுதான் அரசின் வேண்டுகோள். அப்போது உச்சநீதிமன்றம் உண்மை நிலைமையை முழுமையாக உணர்ந்து கொள்ளாத நிலையில் ஊகத்தின் அடிப்படையில் இழப்பீடு வழங்கிவிட்டது என்றும், இப்போது அதை மறுபரிசீலனை செய்து இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்பதும் மத்திய அரசின் கோரிக்கை.

யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கி விட்டிருக்கும் டெü நிறுவனம், எங்களுக்கும் நச்சுக் கழிவுகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்றது. "எல்லா இழப்பீடுகளையும் யூனியன் கார்பைடு செய்து முடித்த பின்னர்தான் அந்த நிறுவனம் எங்கள் கைக்கு மாறியது. ஆகவே, நாங்கள் இந்த நச்சுக் கழிவுக்குப் பொறுப்பேற்க மாட்டோம்' என்பது "டௌ' நிறுவனத்தின் வாதம்.

யூனியன் கார்பைடு நிறுவனம் நீதிமன்றத்தில் அளித்த இழப்பீட்டுத் தீர்வைகள் யாவும் 1984 டிசம்பர் மாதம் நடந்த விஷவாயுக் கசிவு மரணங்களுக்கு மட்டும்தானே அல்லாமல், நச்சுக் கழிவை அகற்றும் பணிகளுக்கும் சேர்த்து அளிக்கப்பட்ட இழப்பீடு அல்ல.

மேலும், டௌ நிறுவனத்துக்கு விற்கும் முன்பாக, யூனியன் கார்பைடு நிறுவனம் கேட்டுக்கொண்டதன் பேரில் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் இந்த நச்சுக் கழிவுகள் பற்றி ஆய்வு நடத்தி, 1994-ல் அறிக்கை அளித்துள்ளது. மண்ணும் நிலத்தடி நீரும் நச்சுக் கழிவால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டுள்ள இந்த அறிக்கை குறித்து 1996-ம் ஆண்டு தங்களுக்குத் தெரிய வந்ததாக டெü நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வழக்குரைஞர் ஒப்புக்கொண்டிருக்கிறார். நிலைமை இதுவாக இருக்க, நச்சுக் கழிவுகளை அகற்றுவதில் தனக்குப் பொறுப்பே கிடையாது என்றும் யூனியன் கார்பைடு செய்யாமல் விட்டதற்குக் தான் ஏன் பொறுப்பேற்க வேண்டும் என்றும் டெü நிறுவனம் கேள்வி எழுப்புவது வேடிக்கையாக இருக்கிறது.

யாரோ அன்னிய வியாபாரி இங்கே வந்து தொழில் தொடங்கி லாபம் ஈட்டினார். அந்தத் தொழிற்சாலையில் கசிந்த விஷவாயுவால் போபால் நகர மக்கள் பல தலைமுறைகள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் விட்டுச்சென்ற நச்சுக் கழிவுகள் மண்ணையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்திவிட்டிருக்கின்றன. அவர்கள் செய்த தவறைத் தட்டிக் கேட்டு நியாயம் தேடுவதற்கு பதிலாக இந்திய அரசு மக்களின் வரிப்பணத்தில் பொறுபேற்கிறது'' என்று 7.8.2010இல் "தினமணி' இதைத் தலையங்கத்தில் சாடியிருந்தது.

இது ஒருபுறம் இருக்க, "டௌ' குளோபல் டெக்னாலஜுஸýடனான ரிலையன்ஸ் பெட்ரோ கெமிக்கல்ஸின் தொழில்நுட்ப ஒப்பந்தம் ஜாம் நகரில் ஜாம்ஜாமென்று செயல்வடிவம் பெற்றது. மத்திய வர்த்தக, தொழில் அமைச்சகம் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு போபால் விஷவாயு விபத்துக்குக் காரணமான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் உரிமையாளர்களான "டௌ' குளோபலுடன் இணைந்து ஜாம்நகர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ஒரு பாலி புரொபலின் தொழிற்சாலை அமைக்க அனுமதி வழங்கி இருக்கிறது.

2006 அக்டோபர் மாதம் "டௌ' பன்னாட்டுக் குழுமத்தைச் சேர்ந்த "டௌ' குளோபல் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் அன்னியத் தொழில்நுட்பக் கூட்டு முயற்சிக்கான அனுமதியை ரசாயனம், உர அமைச்சகம்தான் ரிலையன்ஸ் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கு அளித்தது என்றாலும், மார்ச் 2007-இல், தொழில் கொள்கை மற்றும் வளர்ச்சி ஆணையத்துக்கு, அந்த அனுமதியை மறுபரிசீலனை செய்யும்படி வேண்டுகோள் விடுத்தது. மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் "டௌ' கெமிக்கல்ஸ் மீது இழப்பீடு கோரும் வழக்கு நிலுவையில் இருப்பதால், இந்த அனுமதியை நாம் மறுபரிசீலனை செய்வது நல்லது என்று ரசாயன அமைச்சகம் கோரியது.

ஆனால், வர்த்தக அமைச்சகமோ ரசாயன அமைச்சகத்தின் கோரிக்கையைச் சட்டை செய்ததாகவே தெரியவில்லை. காலம் கடந்த வேண்டுகோள் என்று கூறி ரசாயன அமைச்சகத்தின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.

2007-ஆம் ஆண்டில் அப்போது வர்த்தகத்துறை அமைச்சராக இருந்த கமல்நாத், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் எழுதியிருப்பது இப்போது தெரியவந்திருக்கிறது. அந்தக் கடிதத்தில், அமெரிக்க முதலீட்டாளர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் நல்லதொரு "சமிக்ஞை' அளிக்கும் விதத்தில், நாம் போபால் விஷவாயுக் கசிவுப் பிரச்னையில் "டௌ' கெமிக்கல்ஸிடம் கோரும் நஷ்டஈடு பற்றி சற்று யோசித்துச் செயல்படுவது நல்லது என்று குறிப்பிட்டதுடன் நின்றுவிடவில்லை. ரிலையன்ஸ் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துடனான தொழில்நுட்ப ஒப்பந்தத்தை நாம் அனுமதிப்பதேகூட அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு நல்லிணக்க வழிகாட்டியாக அமையும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

சமீபத்தில், இந்தப் பிரச்னை தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் இன்னும் சில தகவல்கள் தெளிவாக்கப்பட்டிருக்கின்றன. "டௌ' நிறுவனம் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஒன்று அல்ல என்பதை அன்னிய முதலீட்டாளர்களுக்குத் தெரியப்படுத்துவது ஒரு நல்ல அறிகுறி'' என்று வெளிவிவகாரத்துறை கருத்துத் தெரிவித்திருப்பது தெரியவந்துள்ளது. போபால் விஷவாயுக் கசிவுப் பிரச்னையில் யூனியன் கார்பைட் நிறுவனத்துக்கு எந்தவிதப் பொறுப்பும் இல்லை என்று நீதிமன்றங்களின் மூலம் இந்திய அரசு தெளிவுபடுத்தி, அந்த நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்யவும், இயங்கவும் வழிகோல வேண்டும் என்று "டௌ' குழுமம் விழைவதும் தெரியவந்துள்ளது.

ஒருபுறம், போபால் விஷவாயுக் கசிவுக்கு "டௌ' குழுமத்தைச் சேர்ந்த யூனியன் கார்பைட் நிறுவனம் அளிக்க வேண்டிய இழப்பீடு போதாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுச் செய்தது. இன்னொருபுறம், ரிலையன்ஸ் பெட்ரோ கெமிக்கஸ்ஸýக்கு அதே நிறுவனத்துடன் தொழில்நுட்ப ஒப்பந்தம் செய்துகொள்ள அனுமதியும் வழங்கியது, இதுபற்றியும் "ஏன் இந்த இரட்டை வேடம்?' என்கிற தலைப்பில் 6.12.2010 அன்று "தினமணி' தலையங்கம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

போபால் சம்பவம் முடிந்து 30 ஆண்டுகளாகிவிட்டன. இனியும்கூடப் பல ரசாயனத் தொழிற்சாலைகளிலும், எரிவாயுக் குழாய்களிலும் ஆங்காங்கே கசிவுகள் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. விபத்துகள் நடைபெறுகின்றன. தொழில்நுட்ப ரீதியாகத் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு மேம்படுத்தப்பட்டு விட்டன. ஆனாலும் கவனக் குறைவால் விபத்துகள் ஏற்பட்ட வண்ணம்தானே இருக்கின்றன.

போபால் விஷவாயு விபத்தில் நாம் நம்முடைய குற்றத்தைப் பற்றி எதுவுமே கூறாமல் இருக்கிறோம். யூனியன் கார்பைடின் பூச்சிமருந்துத் தொழிற்சாலை 1969இல் தொடங்கப்பட்டது. அதைக் கண்காணிக்க வேண்டிய, பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்பட்டிருக்கின்றனவா என்பதை சரி பார்க்க வேண்டிய, நச்சுக் கழிவுகள் அவ்வப்போது அகற்றப்பட்டாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருக்க வேண்டிய அரசு அதிகாரிகள் ஏன் தங்கள் கடமையைச் செய்யவில்லை என்பதைப் பற்றி யாருமே கேள்வி எழுப்புவதில்லை.

இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக்குவது என்பது அவசியமான இலக்கு. அதே நேரத்தில் வருங்கால சந்ததியினருக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பான தொழில்வளத்துடன் கூடிய உலக உற்பத்தி மையமாக்குவது என்பதுதான் பொறுப்புணர்வு உள்ள ஓர் அரசின் இலக்காக இருக்க முடியும். அது சாத்தியப்படாவிட்டால், ஊருக்கு ஊர் போபால் போன்ற நிகழ்வுகளை எதிர்கொள்ள நேரும்.

பொருளாதார வளர்ச்சிக்கும், அதிகரித்து வரும் மக்கள் தொகையின் அன்றாட வாழ்வாதாரத்திற்கும், தொழில் வளர்ச்சி அவசியம்தான். பெருகி வரும் மின் தேவையை ஈடுகட்ட அணுமின்நிலையங்கள் அவசியம் என்கிறார்கள். அதையும் ஏற்றுக்கொள்வோம். ஆனால், விபத்துகள் நேரிட்டால் அதற்கு யார் பொறுப்பு என்பதைத் தெளிவுபடுத்தாமல், தொழில் வளர்ச்சியைப் பற்றி மட்டுமே பேசுவது என்பது, வள்ளுவப் பேராசான் கூறுவதுபோல "வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்' என்பது போலாகி விடுமே...

இந்தியாவில் அணுமின் நிலையங்கள் அமைக்க அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் என்று பல நாடுகள் போட்டி போடுகின்றன. அவர்களது அணுஉலைகளை இந்தியாவுக்கு விற்றா லாபம் சம்பாதிக்கத் துடிக்கின்றன. அதில் தவறே இல்லை. ஆனால், தவறு நேர்ந்தால் அதற்குப் பொறுப்பேற்க அவர்கள் யாருமே தயாராக இல்லையே, அது ஏன்?

எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் கையூட்டுப் பெறும் அரசு அலுவலர்களையும், அதிகாரிகளையும் கொண்ட நிர்வாக இயந்திரம்; மக்களைப் பற்றியோ, தேசத்தைப் பற்றியோ பொறுப்புணர்வே இல்லாத அரசியல்வாதிகளாலான ஆட்சிமுறை; முப்பது ஆண்டுகளாகியும், 18,000 டன் நச்சுக் கழிவு அகற்றப்படாததைப் பற்றிக் கவலைப்படாமல் எதையும் தாங்கும் இதயத்துடனான இந்தியப் பொதுஜனம்!

இந்தக் கட்டுரைத் தொடரைப் படிக்கும், ஒவ்வொருவரும், போபால் யூனியன் கார்பைட் பூச்சிமருந்துத் தொழிற்சாலை அருகில் வசிப்பதாக நினைத்துப் பாருங்கள். அப்போது தெரியும் வலியும், வேதனையும், விபரீதமும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com