வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில் மத்திய திட்டங்களுக்கு ஆதரவு கேட்போம்: சுஷ்மா ஸ்வராஜ்

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் திட்டங்களுக்கு உதவுவமாறு, பிரவாசி பாரதிய திவஸ் மாநாட்டில்
வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில் மத்திய திட்டங்களுக்கு ஆதரவு கேட்போம்: சுஷ்மா ஸ்வராஜ்

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் திட்டங்களுக்கு உதவுவமாறு, பிரவாசி பாரதிய திவஸ் மாநாட்டில் (வெளிநாடு வாழ் இந்தியர்களின் மாநாடு) ஆதரவு கேட்போம் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

வெளிநாடு வாழ் இந்தியர்களை ஒருங்கிணைப்பதற்காக உருவாக்கப்பட்ட "பிரவாசி பாரதிய திவஸ்' 13-ஆம் ஆண்டு மாநாடு அடுத்த ஆண்டு குஜராத் மாநிலம் காந்தி நகரில் ஜனவரி 7 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இது குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் சுஷ்மா ஸ்வராஜ் திங்கள்கிழமை கூறியதாவது: "பாரத பிரதமராக வாஜ்பாய் 2003-இல் இருந்தபோது தொடங்கப்பட்ட பிரவாசி பாரதிய திவஸ் ஒருங்கிணைப்பு மாநாடு கொண்டாடப்பட்டு வருகிறது.

2015 ஆண்டுக்கான "பிரவாசி பாரதிய திவஸ்' குஜராத் மாநிலத்தில் கொண்டாடப்பட  உள்ளது. இந்த நிகழ்ச்சியில் வரும் ஜனவரி 8-இல் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். ஜனவரி 9-ஆம் தேதி நிறைவு நாள் நிகழ்வில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்று சிறந்த வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு விருதுகள் வழங்க உள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் சுமார் 3,000 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர். 

மாநில முதல்வர்களுக்கு அழைப்பு: நவீன நகரங்கள் அமைப்பது, நகர்ப்புற திட்டங்கள், திறன் மேம்பாடு, சுற்றுலா திட்டங்கள், இந்தியாவில் உள்ள வாய்ப்புகள் குறித்து இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும். மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய வர்த்தகத் துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட பல மத்திய அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்று வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் கலந்துரையாடவுள்ளனர். அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டங்களில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள "இந்தியாவில் தயாரிப்போம்', கங்கை நதி சுத்திகரிப்பு திட்டங்களுக்கு ஒத்துழைக்கும்படி வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் ஆதரவு கேட்போம்.

குஜராத்தில் நடத்துவது ஏன்?: "மகாத்மா காந்தி, தென் ஆப்பிரிக்காவில் இருந்து 1915, ஜனவரி 9-இல் இந்தியாவுக்கு திரும்பி வந்தார். வரும் 2015-இல் இந்நிகழ்வின் 100-ஆவது ஆண்டையொட்டி அவர் பிறந்த இடமான குஜராத் மாநிலத்தில் இந்நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்யப்பட்டது.

 இதுதவிர, இந்நிகழ்ச்சியை குஜராத்தில் 2015-இல் நடத்த வேண்டும் என்று கடந்த 2010-இல் குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியின் வாயிலாக காந்தியின் சிந்தனைகளை பரப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது' என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.

இதையடுத்து, "வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படுமா?' என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "வெளிநாடு வாழ் இந்தியர்கள் அங்குள்ள தூதரகங்களிலேயே வாக்களிப்பது உள்ளிட்ட வாய்ப்புகளை பரிசீலித்து வருகிறோம். இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் இதுவரை முடிவெடுக்கவில்லை' என்றார்.

"பணிப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்'

"சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இந்தியர்களுக்கான பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த பிரவாசி பாரதிய திவஸில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

 தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், "சவூதி அரேபியாவில் சுமார் 300 தமிழர்கள் பணியை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு உரிய பணிப் பாதுகாப்பு வழங்கப்படுமா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு சுஷ்மா ஸ்வராஜ், "சவூதி அரேபியாவில் வேலையிழந்து தவித்த 40 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு அவர்களுக்கு உரிய வசதிகளை அங்குள்ள இந்திய தூதரகம் செய்து வருகிறது. வரும் காலங்களில் அவர்களின் பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த பிரவாசி பாரதிய திவஸில் பங்கேற்கும் வளைகுடா நாடுகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி தீர்வு காணப்படும்' என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com