Enable Javscript for better performance
கருணை மனு மீது முடிவெடுக்கும் வரை புல்லருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாது- Dinamani

சுடச்சுட

    

    கருணை மனு மீது முடிவெடுக்கும் வரை புல்லருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாது

    By dn  |   Published on : 27th February 2014 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    acqused

    "தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தேவிந்தர்பால் சிங் புல்லரின் கருணை மனு மீது முடிவு எடுக்கப்படும் வரை அவருக்கு தண்டனை நிறைவேற்றப்படாது' என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

    புல்லருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அவரது மனைவி நவநீத் கவுர் தாக்கல் செய்த மறுசீராய்வு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம் தலைமையிலான அமர்வு முன்பு புதன்கிழமை நடைபெற்றது.

    அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் ஜி.இ. வாஹனவதி, "புல்லரின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு தில்லி துணை நிலை ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். புல்லரின் கருணை மனு மீது மத்திய அரசு முடிவு எடுக்கும் வரை அவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாது' என்று கூறினார்.

    இதைக் கேட்ட நீதிபதிகள், "புல்லரின் மனைவி தாக்கல் செய்துள்ள கருணை மனு மீது மத்திய அரசு உடனடியாக இறுதி முடிவு எடுக்க வேண்டும். இதில் ஏற்படும் காலதாமதத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் தினந்தோறும் சித்ரவதைக்கு உள்ளாகின்றனர். ஆகையால், புல்லரின் கருணை மனு மீது மத்திய அரசு 2 வாரத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும்' என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    பின்னணி: காலிஸ்தான் தீவிரவாதியான தேவிந்தர்பால் சிங் புல்லர் தில்லி காங்கிரஸ் கட்சி அலுவலகம் அருகே 1993ஆம் ஆண்டு குண்டுவெடிப்பை நிகழ்த்தினார். அதில், 9 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் புல்லருக்கு 2001ஆம் ஆண்டு கீழ் நீதிமன்றம் அளித்த தூக்குத் தண்டனையை 2002ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அதன்பின்னர் புல்லர் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை 2 முறை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai