கமல்ஹாசன், வைரமுத்துவுக்கு பத்ம பூஷண் விருது

தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, கடம் வித்வான் டி.எச்.விநாயக்ராம், இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு இந்த ஆண்டுக்கான பத்ம பூஷண் விருது கிடைத்துள்ளது.
கமல்ஹாசன், வைரமுத்துவுக்கு பத்ம பூஷண் விருது

தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, கடம் வித்வான் டி.எச்.விநாயக்ராம், இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு இந்த ஆண்டுக்கான பத்ம பூஷண் விருது கிடைத்துள்ளது.

தொழிலதிபர் மல்லிகா சீனிவாசன், ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான சந்தோஷ் சிவன், மருத்துவப் பேராசிரியர் டாக்டர் தேனுமகள் பவுலோஸ் ஜேக்கப், யுனானி மருத்துவர் பேராசிரியர் ஹக்கீம் சையது கலீஃபதுல்லா உள்ளிட்டோர் பத்மஸ்ரீ விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ உள்ளிட்ட தேசிய விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 127 பேரின் பட்டியலை மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது.

பத்ம விபூஷண்: முன்னாள் மத்திய அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் தலைவர் டாக்டர் ஆர்.மஷேல்கர், பிரபல யோகாசன குரு பி.கே.எஸ்.ஐயங்கார் ஆகிய இருவரும் பத்ம விபூஷண் விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மறைந்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மாவுக்கு மரணத்துக்குப் பிந்தைய விருதாக பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம பூஷண்: தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, கடம் வித்வான் டி.எச்.விநாயக்ராம், டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ஆகியோருக்கும் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே. ராதாகிருஷ்ணன், நீதிபதி தல்வீர் பண்டாரி, விஞ்ஞானி திருமலாச்சாரி ராமசாமி, ஹிந்துஸ்தானி இசைப் பாடகி பர்வீன் சுல்தானா, ஆங்கிலோ இந்திய எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட், தேசிய பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த், எழுத்தாளர் அனிதா தேசாய் உள்பட மொத்தம் 24 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பத்மஸ்ரீ: தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மல்லிகா சீனிவாசன், திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான சந்தோஷ் சிவன், மருத்துவப் பேராசிரியர் டாக்டர் டி. பவுலோஸ் ஜேக்கப், யுனானி மருத்துவர் பேராசிரியர் ஹக்கீம் சையது கலீஃபதுல்லா, டாக்டர் அஜய் குமார் பாரிடா, டாக்டர் கோவிந்தன் சுந்தரராஜன், ராமஸ்வாமி ஆர்.ஐயர், கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல், நரம்பியல் நிபுணர் சுனில் பிரதான், புற்றுநோய் மருத்துவ நிபுணர் ராஜேஷ் குரோவர், மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவாரின் சகோதரர் பிரதாப் கோவிந்தராவ், நடிகை வித்யா பாலன், நடிகர் பரேஷ் ராவல், மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாடக நடிகர் பன்சி கௌல், சாரங்கி வாத்தியக் கலைஞர் உஸ்தாத் மொய்னுதீன் கான் உள்ளிட்ட 101 பேர் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 27 பெண்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்பட 7 வெளிநாட்டவரும் அடங்குவர்.

பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளவர்களில் 3 பேர் ஏற்கெனவே காலமாகி விட்டனர். மூடநம்பிக்கை எதிர்ப்புப் போராளி என்.ஏ.தபோல்கர் உள்ளிட்ட அந்த மூவருக்கும் மரணத்துக்குப் பின் இவ்விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் விரைவில் நடைபெற உள்ள விழாவில் இவ்விருதுகளை பிரணாப் முகர்ஜி வழங்குவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com