Enable Javscript for better performance
கறுப்புப் பண விவகாரம்: சிறப்பு விசாரணைக் குழு அமைக்காத மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    கறுப்புப் பண விவகாரம்: சிறப்பு விசாரணைக் குழு அமைக்காத மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

    By dn  |   Published on : 27th March 2014 01:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்து 3 ஆண்டுகளாகியும் நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக கடந்த 2011ஆம் ஆண்டு அளித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்ற மத்திய அரசு விடுத்த கோரிக்கையை ஏற்கவும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்.எல். தத்து, ரஞ்சன் பிரகாஷ் தேசாய், மதன் பி. லோகுர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

    அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன், "கறுப்புப் பணத்தை மீட்கும் நடவடிக்கை மத்திய அரசு எடுத்து வருவதால், இதற்காக சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று கடந்த 2011ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவை திரும்பப் பெற வேண்டும்' என்று வேண்டுகோள்விடுத்தார். அதை ஏற்க மறுத்து நீதிபதிகள் கூறியதாவது:

    சிறப்பு விசாரணைக் குழு அமைக்கும் பொறுப்பை மத்திய அரசு வேண்டுமென்றே தட்டி கழித்து வருகிறது. கடந்த 60 ஆண்டுகளாக கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு தவறிவிட்டது. வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களின் பெயர்களையும் வெளியிடவில்லை. மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டிருக்காது. உங்கள் பணியை செய்யத் தவறிய காரணத்தால் தான், நாட்டின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகள் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.

    ஆனால், 3 ஆண்டுகளாகியும் இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் முடிவை இந்தச் சிறப்பு விசாரணைக் குழு செய்யட்டும்' என்று நீதிபதிகள் கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai