Enable Javscript for better performance
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை \\\"ஏமாற்று வித்தை\\\': பாஜக- Dinamani

சுடச்சுட

    
    bjp

    காங்கிரஸ் கட்சி புதன்கிழமை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை "ஏமாற்று வித்தை' என்று பாஜக விமர்சித்துள்ளது.

    இது தொடர்பாக பாஜக செய்தித்தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், "கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அளித்த தேர்தல் வாக்குறுதிகளையே காங்கிரஸ் கட்சி இன்னும் நிறைவேற்றவில்லை.

    இந்நிலையில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து விலகும் நேரத்தில் தற்போது புதிய வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது. இது காயத்தில் உப்பை தடவுவதுபோல் உள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள் அனைத்தும் நம்பகத்தன்மையற்றவையாக உள்ளன. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அழிவுப் பாதைக்கு அக்கட்சி கொண்டு சென்றுள்ளது. ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் தவறிவிட்டனர். ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் அசோக் சவாணுக்கு தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளனர். ஊழல் செய்யும் தங்கள் கட்சித் தலைவர்களை காங்கிரஸ் கட்சி வெட்கமில்லாமல் காப்பாற்றி வருகிறது.

    வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் மீட்கப்படும் என்று அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. நாட்டின் வறுமையை ஒழிப்பதில் அக்கட்சி மோசடி செய்துள்ளது' என்று ரவி சங்கர் பிரசாத் கூறினார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அக்கட்சிக்கு விபத்தைதான் ஏற்படுத்தும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத், "ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் நாட்டின் உணவு பணவீக்கம் இரட்டை இலக்கத்தை எட்டியுள்ள நிலையில், பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அறிவித்துள்ளது. இது அக்கட்சிக்கு விபத்தைதான் ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai