Enable Javscript for better performance
முசாஃபர்நகர் கலவரத்தை தடுக்க தவறிவிட்டது உ.பி. அரசு: உச்ச நீதிமன்றம் கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    முசாஃபர்நகர் கலவரத்தை தடுக்க தவறிவிட்டது உ.பி. அரசு: உச்ச நீதிமன்றம் கண்டனம்

    By dn  |   Published on : 27th March 2014 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    SupremeCourtIndia

    முசாஃபர்நகர் கலவரத்தை உத்தரப் பிரதேச அரசு தடுக்கத் தவறிவிட்டதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கலவரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து அந்த மாநில அரசு விசாரணை மேற்கொண்டு வருவதால் சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் உத்தரவிட்டுள்ளது.

    முசாஃபர் நகர் கலவரம் தொடர்பாக தகுந்த விசாரணை மேற்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகளை அறிவுறுத்துமாறும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறும் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட பல நபர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    அந்த மனு மீதான விசாரணையின்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு கூறியதாவது:

    முசாஃபர்நகர் கலவரம் தடுக்கப்படாததற்கு மாநில அரசே பொறுப்பு. எனினும், கலவரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து அந்த மாநில அரசு தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய தேவையில்லை. அதே சமயத்தில், கலவரத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளின் அரசியல் தகுதிகளை தவிர்த்து, அவர்கள் மீது மாநில அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வழக்கு விசாரணை முடியும் வரை கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்துக்கு மாநில அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள முசாஃபர்நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிகழ்ந்த வகுப்புவாத கலவரத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 51,000 பேர் தங்கள் வீடுகளை இழந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai