Enable Javscript for better performance
ரூ.10,000 கோடி செலுத்தினால் சுப்ரதா ராய்க்கு ஜாமீன்: நீதிமன்றம் நிபந்தனை- Dinamani

சுடச்சுட

    

    ரூ.10,000 கோடி செலுத்தினால் சுப்ரதா ராய்க்கு ஜாமீன்: நீதிமன்றம் நிபந்தனை

    By dn  |   Published on : 27th March 2014 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    subboth_roy

    முதலீட்டாளர்களின் பணத்தை திருப்பித் தராதது தொடர்பான வழக்கில், ரூ.10,000 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தினால் சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய்க்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை நிபந்தனை விதித்துள்ளது.

    இதுதொடர்பான வழக்கு, நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் ஜே.எஸ். கேஹர் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள் கூறுகையில், "இந்த வழக்கில் நீதிமன்ற கண்டனத்திற்கு ஆளாகி எங்களின் உத்தரவின்படி, கடந்த 4ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர்களுக்கு (சுப்ரதா ராய் மற்றும் சஹாரா குழும நிறுவன இயக்குநர்கள் ரவிசங்கர் துபே, அசோக் ராய் சௌத்ரி) இடைக்கால ஜாமீன் வழங்க தயாராக இருக்கிறோம். ஆனால் அதற்கு ரூ.10,000 கோடியை உச்ச நீதிமன்றத்தில் சஹாரா குழுமம் செலுத்த வேண்டும். அவ்வாறு ரூ.10,000 கோடி உச்ச நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டதும், இடைக்கால ஜாமீனில் அவர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள். அதன்பிறகு நீதிமன்றத்தில் செலுத்தப்பட்ட ரூ.10,000 கோடியும் செபி அமைப்பிடம் வழங்கப்படும்' என்றனர்.

    அப்போது சுப்ரதா ராய் தரப்பு வழக்குரைஞர்கள், "ரூ.10,000 கோடி பணத்தை செலுத்துவதற்கு வசதியாக, முடக்கப்பட்டுள்ள சஹாரா குழும வங்கி கணக்குகளை விடுவிக்க வேண்டும்' என்றனர். இதனைக் கேட்ட நீதிபதிகள், "சஹாரா குழும வங்கி கணக்கு விவரங்களை வியாழக்கிழமை தாருங்கள், அந்த கணக்குகளை விடுவிப்பது தொடர்பான உத்தரவை பிறப்பிக்கிறோம்' என்றனர்.

    முன்னதாக, முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி தருவது தொடர்பான புதிய திட்டம், சஹாரா நிறுவனம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. அதில், ரூ.2,500 கோடியை இன்னும் 3 வேலை தினங்களில் செலுத்தி விடுவதாகவும், ஜுன், செப்டம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் 3 நிலுவையாக தலா ரூ.3,500 கோடியை செலுத்துவதாகவும், எஞ்சிய ரூ.7,000 கோடியை 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அளிப்பதாகவும் உறுதி அளிக்கப்பட்டு இருந்தது.

    அதனை பரிசீலித்த நீதிபதிகள், சஹாரா குழுமத்தின் திட்டம் குறித்து பதில் தாக்கல் செய்யும்படி செபி அமைப்புக்கு உத்தரவிட்டனர். இதற்கு செபி அளித்த பதிலில், இந்த திட்டம் சாத்தியமில்லாதது என தெரிவித்தது.

    பின்னணி: சஹாரா குழும நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட ரூ.20,000 கோடியை அதன் முதலீட்டாளர்களுக்கு திருப்பித் தரவில்லை என்று அந்நிறுவன தலைவர் சுப்ரதா ராய்க்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது சுப்ரதா ராய் நேரில் ஆஜராகாததால், அவரும், சஹாரா குழும நிறுவனத்தின் இயக்குநர்கள் ரவிசங்கர் துபே, அசோக் ராய் சௌத்ரி ஆகியோரும் நீதிமன்ற கண்டனத்துக்கு ஆளானார்கள்.

    அதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, கடந்த 4ஆம் தேதி சுப்ரதா ராய் உள்ளிட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai