Enable Javscript for better performance
8% வளர்ச்சி; 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு: காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி- Dinamani

சுடச்சுட

  

  8% வளர்ச்சி; 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு: காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி

  By dn  |   Published on : 27th March 2014 04:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  congress

  மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 10 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த 3 ஆண்டுகளில் 8 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.

  2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் தில்லியில் புதன்கிழமை கூட்டாக வெளியிட்டனர்.

  இந்த அறிக்கை தயாரிப்பதற்கு முன்பு கடந்த 5 மாதங்களாக பல்வேறு தரப்பினர்களிடம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 30க்கும் மேற்பட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளார். அந்தக் கூட்டத்தில் தெரிவித்த கோரிக்கைகளின் அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

  49 பக்கங்களைக் கொண்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள்:

  ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 8 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்த்தத் தேவையான பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

  பணவீக்கம், விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும். அந்நிய நேரடி முதலீடுகள் ஊக்குவிக்கப்படும். ஆட்சிக்கு வந்த ஓராண்டில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மற்றும் நேரடி வரி கோட்பாடு ஆகியற்றை அமல்படுத்த நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப்படும்.

  10 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு ஐந்து ஆண்டுகளில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ஆட்சி பொறுப்புக்கு வந்த 100 நாள்களில் விரிவான செயல்திட்டம் அறிவிக்கப்படும்.

  தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க தேசிய அளிவில் ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்படுத்தப்படும்.

  நாட்டில் உள்ள 80 கோடி மக்களின் வாழக்கைத் தரத்தை மேம்படுத்தி அவர்களை நடுத்தர வர்க்கத்தினராக உயர்த்த திட்டங்கள் வகுக்கப்படும்.

  குறைந்த வருமானம் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பொருளாதார பாதுகாப்பு அளிப்பதுடன், அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர நடவடிக்கை எடுக்கப்படும்.

  அனைவருக்கும் சமூக பொருளாதார உரிமைகள் வழங்கப்படும். அதன்படி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு, ஓய்வூதியம், வசிப்பிடம் பெறுவது, கண்ணியத்துடன் வாழ்வது ஆகியவை உரிமைகளாக்க உறுதி செய்யப்படும். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் 3 சதவீதம் சுகாதாரத்துக்காக செலவிடப்படும்.

  நாட்டின் உற்பத்தித்துறையின் வளர்ச்சி 10 சதவீதமாக அதிகரிக்கப்படும். கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஒரு லட்சம் கோடி டாலர்கள் முதலீடு செய்யப்படும்.

  அனைவருக்கும் வங்கிக் கணக்கு இருப்பது உறுதி செய்யப்படும். பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை வங்கிக் கடன் எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். அதில் ரகசிய விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

  வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்பு பணத்தைக் கொண்டு வர சிறப்பு தூதர் ஒருவர் நியமிக்கப்படுவார். நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள ஊழல் தடுப்பு மதோசாக்களை நிறைவேற்ற முக்கியத்துவம் அளிக்கப்படும்.

  பதவியேற்ற 18 மாதங்களில் அனைத்து பஞ்சாயத்துகளும் அகண்ட அலைவரிசை சேவையுடன் இணைக்கப்படும்.

  இலங்கைப் பிரச்னை: இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டு சட்டத்தின் கீழ் சம உரிமையுடன் வாழ்வதற்கு அந்நாட்டு அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும். 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்தவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கவும் வலியுறுத்தப்படும். இறுதிக்கட்ட போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து கால நிர்ணயம் செய்து விசாரணை நடத்த பிற நாடுகளுடன் சேர்ந்து இலங்கையை நிர்பந்திப்போம்.

  மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானை வலியுறுத்துவோம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

  ஊழலை முழுமையாக ஒழிக்க முடியாது: பிரதமர்

  வளரும் நாடுகளில் ஊழலை முழுமையாக ஒழிப்பது என்பது இயலாத ஒன்று. ஆனால் ஊழலை ஒடுக்கத் தேவையான வழிமுறைகளை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.

  நாட்டின் பாதுகாப்பு முக்கியம்: சோனியா

  2014ஆம் ஆண்டு தேர்தல் என்பது, வளர்ச்சி, கொள்கைகள், திட்டமிடுதல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அடிப்படையிலானது மட்டும் அல்ல. நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தையும் ஒற்றுமையையும் பாதுகாப்பதற்கான தேர்தலும் ஆகும்.

  கருத்துக் கணிப்பில் நம்பிக்கையில்லை: ராகுல்

  கடந்த 2004, 2009ஆம் ஆண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் தோல்வியடையும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.

  ஆனால், காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அதுபோல், இம்முறையும் கருத்துக் கணிப்புகள் நிச்சயம் பலிக்கப் போவதில்லை. தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai