Enable Javscript for better performance
7-வது கட்டத் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: குஜராத்தில் 62%, பஞ்சாபில் 73%- Dinamani

சுடச்சுட

    7-வது கட்டத் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: குஜராத்தில் 62%, பஞ்சாபில் 73%

    By dn  |   Published on : 01st May 2014 05:10 AM  |   அ+அ அ-   |    |  

    voters

    மக்களவைத் தேர்தலில் 7-வது கட்டமாக நாட்டில் 7 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் குஜராத்தில் 62 சதவீத வாக்குகளும், பஞ்சாபில் 73 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. முதல் முறையாகத் தேர்தலை சந்திக்கும் தெலங்கானா பிராந்தியத்தில் 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் 57 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 81.35 சதவீத வாக்குகளும், ஜம்மு காஷ்மீரில் குறைந்தபட்சமாக 25 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

    பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, ராஜ்நாத் சிங், முரளி மனோகர் ஜோஷி, அருண் ஜேட்லி ஆகியோரின் தலைவிதிகள் இந்த தேர்தலில் நிர்ணயிக்கப்படும்.

    குஜராத்தில் 26 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும், கட்சியின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானியும் காந்திநகரில் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். நரேந்திர மோடி போட்டியிடும் வதோதரா தொகுதியில் அதிகபட்சமாக 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மாநிலத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு தொடங்கும் நேரத்துக்கு முன்பே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். குஜராத்தில் 62 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பஞ்சாப் மாநிலத்தில் 13 மக்களவைத் தொகுதிகளில் மொத்தம் 253 பேர் களத்தில் உள்ளனர். இங்கு 73 சதவீத வாக்குகள் பதிவாயின. மோகா, கதூர் சாஹிப், அமிருதசரஸ் ஆகிய இடங்களில் அகாலி தளம் தொண்டர்களுக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்குக்கும் இடையே சிறு மோதல்கள் ஏற்பட்டன. பின்னர் போலீஸார் தலையீட்டின் பேரில் அங்கு அமைதி திரும்பியது. மத்திய இணையமைச்சர் ப்ரணீத் கவுர், பாட்டியாலாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவரது கணவரும் காங்கிரஸ் வேட்பாளருமான அம்ரீந்தர் சிங், அமிருதசரஸ் தொகுதியில் பா.ஜ.க.வின் அருண் ஜேட்லியை எதிர்த்துப் போட்டியிடுகிறார். ஆனால், மூன்று முறை அமிருதசரஸ் தொகுதியிலிருந்து போட்டியிட்டு எம்,பி.யான நவஜோத் சித்து இந்த முறை தேர்தலில் வாக்களிக்கவில்லை. இந்த முறை அவருக்கு சீட் மறுக்கப்பட்டு அந்த இடத்தில் அருண் ஜேட்லி போட்டியிடுவதால் சித்து தொகுதி பக்கமே வரவில்லை என்று கூறப்படுகிறது.

    உத்தரப் பிரேதச மாநிலத்தில் 14 மக்களவைத் தொகுதிகளுக்கு 233 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் பி.எல்.ஜோஷி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, லக்னௌ தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரீட்டா பகுகுணா, பா.ஜ.க. தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், அக்கட்சியைச் சேர்ந்த கல்ராஜ் மிஸ்ரா ஆகியோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இங்கு மொத்தம் 57.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ரே பரேலி தொகுதியில் போட்டியிடுகிறார். மூன்றாவது முறையாக இத்தொகுதியில் போட்டியிடும் அவர் எளிதில் வெற்றிபெறக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

    பிகாரில் நான்காவது கட்டமாக 7 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இங்கு 60 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாதேபுரா தொகுதியில் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் போட்டியிடுகிறார். இங்குள்ள ஆதர்ஷ் மத்திய வித்யாலயா பள்ளியில் சரத் யாதவ் தனது வாக்கை பதிவு செய்தார். மதுபானி, தார்பங்கா, பெகுசராய் உள்ளிட்ட தொகுதிகளில் மக்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். ஐக்கிய ஜனதாதளம் கட்சி பாஜகவுடன் உறவை முறித்துக் கொண்டதால் தேர்தலில் அக்கட்சி வெற்றி பெறுவது கடினமான காரியமாக இருக்கும்.

    மேற்குவங்கத்தில் மூன்றாவது கட்டமாக 9 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. ஒருசில இடங்களில் லேசான வன்முறை மற்றும் சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு காரணமாக சரிவர வேலைசெய்யாதது உள்ளிட்ட புகார்கள் தவிர தேர்தல் அமைதியாக நடந்ததாக மேற்குவங்க மாநில தேர்தல் அதிகாரி சுனில் குப்தா தெரிவித்தார். இங்கு அதிகபட்சமாக 81.35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஆந்திர மாநிலம், தெலங்கானா பகுதியில் 119 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், 17 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 72 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆந்திர மாநில ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன், தலைமைத் தேர்தல் அதிகாரி பன்வர்லால் ஆகியோர் வாக்களித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லா உள்பட 12 பேர் களத்தில் உள்ளனர். ஃபரூக் அப்துல்லா மற்றும் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா இருவரும் வாக்களித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இங்கு மிகக்குறைந்த அளவாக 25.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp