Enable Javscript for better performance
15-வது பிரதமரானார் நரேந்திர மோடி- Dinamani

சுடச்சுட

  

  15-வது பிரதமரானார் நரேந்திர மோடி

  By dn  |   Published on : 27th May 2014 02:47 AM  |   அ+அ அ-   |    |  

  நாட்டின் 15-வது பிரதமராக நரேந்திர தாமோதர்தாஸ் மோடி திங்கள்கிழமை பதவியேற்றார். அவருடன் 45 பேர் கொண்ட மத்திய அமைச்சரவைக் குழுவினரும் பதவியேற்றுக் கொண்டனர்.

  குடியரசுத் தலைவர் மாளிகை வெளிமுற்றத்தில் நடைபெற்ற கோலாகல நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடிக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.

  நரேந்திர மோடி அமைச்சரவையில் உள்ள 45 பேரில் அவர் உள்பட 24 பேர் கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சர்களாவர். 10 பேர் தனிப் பொறுப்புகளுடன் கூடிய இணையமைச்சர்கள். 11 பேர் இணையமைச்சர்கள்.

  கேபினட் அமைச்சர்கள்: ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, நிதின் கட்கரி, சுஷ்மா ஸ்வராஜ், வெங்கய்ய நாயுடு, சதானந்த கௌடா, உமாபாரதி, நஜ்மா ஹெப்துல்லா, கோபிநாத் முண்டே, கல்ராஜ் மிஸ்ரா, மேனகா காந்தி, அனந்தகுமார், ரவிசங்கர் பிரசாத், ஸ்மிருதி இரானி, ஹர்ஷவர்தன், தாவர்சந்த் கெலாட் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

  இவர்கள் தவிர ராம்விலாஸ் பாஸ்வான் (லோக் ஜனசக்தி), அசோக் கஜபதி ராஜு (தெலுங்கு தேசம்), அனந்த் கீத்தே (சிவசேனை), ஹர்ஸிம்ரத் கௌர் (அகாலி தளம்), நரேந்திர சிங் தோமர், ஜூவல் ஓரம் மற்றும் ராதாமோகன் சிங் ஆகியோரும் கேபினட் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர்.

  இணையமைச்சர்கள் (தனிப் பொறுப்பு): ராவ் இந்தர்ஜித் சிங், ஜெனரல் (ஓய்வு) வி.கே.சிங், சந்தோஷ் கங்குவார், ஸ்ரீபாத நாயக், தர்மேந்திர பிரதான், சர்வானந்த சோன்வால், பிரகாஷ் ஜாவடேகர், பியூஷ் கோயல், ஜிதேந்திர சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோர் தனிப் பொறுப்புகளுடன் கூடிய இணையமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

  இணையமைச்சர்கள்: ஜி.எம்.சித்தேஸ்வரா, மனோஜ் சின்ஹா, நிஹல்சந்த், உபேந்திர குஷ்வாஹா, பொன்.ராதாகிருஷ்ணன், கிரண் ரிஜிஜு, கிருஷ்ணபால் குஜ்ஜார், சஞ்சீவ்குமார் பலியான், மன்சுக்பாய் வஸாவா, ராவ் ஸாப் தன்வி, விஷ்ணுதேவ் சாய், சுதர்ஷன் பகத் ஆகியோர் இணையமைச்சர்களாகவும் பதவியேற்றுள்ளனர்.

  பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபட்ச, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்ஸாய், மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூம், மோரீஷஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம், பூடான் பிரதமர் லியோன்சென் ஷெரிங் டோப்கய், நேபாளப் பிரதமர் சுஷீல் கொய்ராலா, வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹஸீனா சார்பில், அந்நாட்டு நாடாளுமன்ற அவைத் தலைவர் ஷிரீன் ஷர்மீன் சௌத்ரி ஆரியோர் கலந்து கொண்டனர். இந்தியப் பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் சார்க் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளது இதுவே முதன்முறையாகும்.

  குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர்கள் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், பிரதிபா பாட்டீல், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், சரத் பவார், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரமுகர்கள் உள்பட 4,000 பேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

  பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் நரேந்திர மோடி, வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்தித்து அவர்களுடன் கைகுலுக்கினார்.

  மத்திய அமைச்சரவையில் உத்தரப் பிரதேசம், பிகார் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 இடங்களில் பா.ஜ.க. கூட்டணி 73 இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்தது. இதைக் கருத்தில்கொண்டு அந்த மாநிலத்தைச் சேர்ந்த 9 பேருக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளது.

   காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி புரியும் மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தத் தேர்தலில் மொத்தம் உள்ள 48 இடங்களில் 42 இடங்களை பா.ஜ.க.-சிவசேனைக் கூட்டணி வென்றுள்ளது. இந்த மாநிலத்திலிருந்து 6 பேர் மத்திய அமைச்சராகியுள்ளனர்.

   இதேபோல பிகார் மாநிலத்திலிருந்து 5 பேர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். பிகாரில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 31 இடங்களை வென்றுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்தும் நான்கு பேர் அமைச்சர்களாகியுள்ளனர்.

  குஜராத்திலிருந்து அருண் ஜேட்லி, ஸ்மிருதி இரானி, மன்சுக்பாய் வஸாவா ஆகியோர் அமைச்சராகியுள்ளனர். ஹரியாணாவில் இருந்து 2 பேர் அமைச்சராகியுள்ளனர். ஒடிஸாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க. எம்.பி. ஜூவல் ஓரம் கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே வாஜ்பாய் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

   தில்லி, அஸ்ஸாம், ஜம்மு காஷ்மீர், கோவா, அருணாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலிருந்து தலா ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து பொன்.ராதாகிருஷ்ணன் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

   மேற்கு வங்கம், கேரளம், நாகாலாந்து, மிúஸாரம், மேகாலயம், மணிப்பூர், இமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம், திரிபுரா மாநிலங்களிலிருந்து எவரும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை.

   பதவியேற்புக்கு முன்னதாக நரேந்திர மோடி திங்கள்கிழமை காலையில் தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று மலரஞ்சலி செலுத்தினார். அவருடன் பா.ஜ.க. தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்களும் சென்றிருந்தனர்.

  மாநில வாரியாக மத்திய அமைச்சர்கள் கட்சி வாரியாக அமைச்சர்கள்

  பாஜக 42

  சிவசேனை 1

  தெலுங்கு தேசம் 1

  லோக் ஜனசக்தி 1

  சிரோமணி அகாலி தளம் 1 

  மொத்த அமைச்சர்கள் 46

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai