Enable Javscript for better performance
சென்னை திரும்பினார் ஜெயலலிதா: அதிமுகவினர் உற்சாக வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    சென்னை திரும்பினார் ஜெயலலிதா: அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

    By dn  |   Published on : 19th October 2014 05:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jaya_release

    பெங்களூரு சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சென்னையில் உள்ள தனது போயஸ் தோட்ட இல்லத்துக்கு சனிக்கிழமை மாலை வந்தடைந்தார்.

    பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்திலிருந்து, எச்.ஏ.எல். விமான நிலையம் வரையிலும், சென்னை விமான நிலையத்திலிருந்து போயஸ் தோட்ட இல்லம் வரையிலும் அதிமுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    சென்னையில் மழையையும் பொருட்படுத்தாமல் அவருக்கு வழிநெடுகிலும் அதிமுகவினரும், பொதுமக்களும் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பெங்களூரில்...: சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து, அந்த உத்தரவின் அதிகாரப்பூர்வ நகல்களை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா முன்னிலையில் வழக்குரைஞர்கள் நவநீதகிருஷ்ணன், பி.குமார், மணிசங்கர், அன்புக்கரசு, அசோகன் ஆகியோர் சனிக்கிழமை வழங்கினர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி குன்ஹா, ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு பேரின் அசையா சொத்து ஆவணங்கள், ரூ.2 கோடி மதிப்பிலான சான்றுறுதி பத்திரங்களைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து சான்றுறுதி பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஜெயலலிதா உள்பட நால்வரையும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையிலிருந்து விடுதலை செய்யுமாறு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை நீதிமன்ற சிறப்பு அலுவலர், சிறை அதிகாரிகளிடம் பிற்பகல் 2.45 மணிக்கு வழங்கினார்.

    சிறையிலிருந்து விடுவிப்பு: நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொண்ட சிறை அதிகாரிகள், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை விடுதலை செய்தனர். சிறையிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக சிறை பெண் கைதிகள், ஊழியர்களுக்கு ஜெயலலிதா சேலை, துண்டுகளை நன்கொடையாக அளித்தார்.

    பின்னர், 21 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு அவர் வெளியே வந்தார். தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் அவரை வரவேற்றனர்.

    சிறை வளாகத்திலிருந்து கார் மூலம் எச்.ஏ.எல். விமான நிலையம் சென்ற ஜெயலலிதாவை, சாலையின் இருபுறமும் நின்றிருந்த அதிமுக தொண்டர்கள் முழக்கமிட்டு வரவேற்றனர்.

    அதன் பிறகு, அங்கிருந்து தனி விமானம் மூலம் மாலை 4.20 மணிக்கு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி உள்ளிட்டோர் சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையத்துக்கு 4.55 மணிக்கு அவர்கள் வந்தடைந்தனர்.

     

    சென்னை விமான நிலையம்: சென்னை விமான நிலையம் வந்தடைந்த ஜெயலலிதாவை, அதிமுகவின் அவைத் தலைவர் மதுசூதனன், அமைப்புச் செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன், அமைச்சர் சின்னையா ஆகியோர் வரவேற்றனர். யாரும் பூங்கொத்து கொடுக்காமல், வணக்கம் மட்டுமே தெரிவித்து ஜெயலலிதாவை வரவேற்றனர். விமான நிலையத்தில் ஏராளமான கட்சித் தொண்டர்களும், மக்களும் கூடியிருந்து ஜெயலலிதாவை வாழ்த்தி வரவேற்பு கோஷங்களை எழுப்பினர். இதனால், விமான நிலைய வளாகமே மக்கள் தலைகளால் நிறைந்திருந்தது.

    ஒரு மணி நேர பயணம்: சென்னை விமான நிலையத்தில் இருந்து போயஸ் தோட்டம் அமைந்துள்ள தனது இல்லத்துக்கு காரில் புறப்பட்டார் ஜெயலலிதா. முன் இருக்கையில் அவர் அமர்ந்திருந்தார். பின் இருக்கையில் சசிகலா, இளவரசி ஆகியோர் அமர்ந்திருந்தனர். விமான நிலையத்தில் இருந்து போயஸ் தோட்ட இல்லம் வரை சாலையின் இருபுறமும் அதிமுக தொண்டர்கள் வரிசையாக நின்றனர். கட்சிக் கொடிகளையும், இரட்டை இலை சின்னங்களையும் கையில் ஏந்தியபடி ஜெயலலிதாவுக்கு வரவேற்புத் தெரிவித்தனர்.

    கட்சியினர் அளித்த உற்சாக வரவேற்பினை ஏற்றுக் கொள்ளும் வகையில், ஜெயலலிதாவின் வாகனம் மெதுவாகச் செல்லத் தொடங்கியது. வழிநெடுகிலும் கட்சியினரின் உற்சாக வரவேற்பைப் பெற்று, சிரித்தபடியே அவர்களுக்கு வணக்கம் கூறியும், வெற்றியைக் குறிக்கும் வகையில் இரண்டு விரல்களை உயர்த்திக் காட்டியபடியும் அவர் சென்றார்.

    அவரது வாகனம் விமான நிலையத்தில் இருந்து கிளம்பி கிண்டி, கோட்டூர்புரம், ஆழ்வார்பேட்டை பகுதிகள் வழியாக போயஸ் தோட்டத்தை வந்தடைந்தது. கோட்டூர்புரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் ஆலயம் அருகே வந்த போது, காரை நிறுத்தி உள்ளே அமர்ந்தபடியே விநாயகரை அவர் வழிபட்டார்.

     

    போயஸ் தோட்டத்தில்...: ஒவ்வொரு இடமாகக் கடந்து, அவரது இல்லம் அமைந்துள்ள போயஸ் தோட்டம் பகுதியை அடைவதற்கு மாலை 6 மணியானது. அங்கும் கட்சியினர் கூடியிருந்து அவருக்கு பெரும் வரவேற்பு அளித்தனர். சினிமா நட்சத்திரங்கள், எம்.எல்.ஏ.க்கள் என பலரும் போயஸ் தோட்டச் சாலையோரம் நின்று ஜெயலலிதாவை வரவேற்றனர்.

    ஒவ்வொரு இடத்தையும் அவரது வாகனம் அடையும் போது, மலர்களைத் தூவி கட்சியினர் வரவேற்புத் தெரிவித்தனர். மாலை 6.05 மணியளவில் போயஸ் தோட்ட இல்லத்தை வந்தடைந்தார் ஜெயலலிதா. போயஸ் தோட்டத்தை ஜெயலலிதாவின் வாகனம் வந்தடைந்த போது, வழியில் கட்சியினர் மலர்தூவி அளித்த வரவேற்பால், வாகனத்தின் முகப்பு முழுவதும் மலர்களால் மூடப்பட்டு இருந்தது. முன்னதாக, காரில் இருந்தபடியே அவரது இல்லத்துக்கு அருகேயுள்ள விநாயகரை வழிபட்டு, பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டார்.

    பட்டாசுகள்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது இல்லத்துக்குள் சென்ற பிறகு, போயஸ் தோட்ட சாலையில் அதிமுகவினர் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கினர். வாண வேடிக்கைகள் அடங்கிய வெடிகளை வெடித்ததால், போயஸ் தோட்டப் பகுதியே பிரகாசமாகக் காட்சி அளித்தது.

    ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுமதி மறுப்பு: முன்னதாக ஜெயலலிதாவை வரவேற்பதற்காக, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சனிக்கிழமை காலை வந்த வந்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அனுமதிக்க போலீஸார் மறுத்தனர்.

    தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், போலீஸார் துணையின்றி சாதாரண காரில் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு காலை 11 மணிக்கு வந்தார்.

    பன்னீர்செல்வத்தை அடையாளம் காண இயலாததால், அவரை சிறை வளாகத்தில் அனுமதிக்க போலீஸார் மறுத்துவிட்டனர். அதன்பிறகு, உயர் போலீஸ் அதிகாரிகளின் அனுமதி பெற்று, பன்னீர்செல்வம் அனுமதிக்கப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai