சுடச்சுட

  
  kattar

  ஹரியாணா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மனோகர் லால் கட்டார், ஆர்.எஸ்.எஸ். இயக்கப் பிரசாரகராக 14 ஆண்டுகள் செயல்பட்டவர்.

  ஹரியாணா மாநிலம், ரோத்தக் மாவட்டத்தில் உள்ள நிந்தனா கிராமத்தில், எளிய விவசாயக் குடும்பத்தில் 1954ஆம் ஆண்டு பிறந்தவர் மனோகர் லால் கட்டார். இவரது பெற்றோர், தேசப் பிரிவினைக்குப் பிறகு, இன்றைய பாகிஸ்தான் பகுதியில் இருந்து, ஹரியாணாவுக்கு இடம் பெயர்ந்தவர்கள்.

  சிறு வயதிலேயே படிப்பு மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த கட்டார், பள்ளியில் நடைபெறும் விவாதங்களில் பங்கேற்று கல்வியில் சிறந்து விளங்கினார். மருத்துவராக வேண்டும் என்றும் அவர் ஆசைப்பட்டார்.

  பின்னர், அவரது கவனம் வியாபாரத்தின் மீது திரும்பியதால், தில்லியில் துணிக்கடை நடத்தி வந்தார். 1975ஆம் ஆண்டு நெருக்கடி நிலை அமலானபோது, அவரது பார்வை அரசியல் பக்கம் திரும்பியது. அப்போது, 21 வயதாக இருந்த மனோகர் லால் கட்டார், 1977ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்தார்.

  இதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பல்வேறு செயல்பாடுகளில் பங்கேற்றார்.

  பின்னர், 1980ஆம் ஆண்டு, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முழு நேரப் பிரசாரகராக அவர் பொறுப்பேற்றார்.

  அந்த இயக்கத்தில் 14 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, 1994ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அவருக்கு கட்சியின் ஹரியாணா மாநிலப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

  இதையடுத்து, 1998ஆம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடி, ஹரியாணா மாநில பாஜக தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக செயல்பட்டபோது, அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை கட்டார் பெற்றார்.

  அதன் பின்னர், 2002ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநில தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக செயல்பட்டார்.

  இதைத் தொடர்ந்து, 2014 மக்களவைத் தேர்தலில், ஹரியாணா மாநில தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராகவும் செயல்பட்டார்.

  பல்வேறு மாநிலங்களில் பாஜக தேர்தல் பிரசாரக் குழுவின் தலைவராக பணியாற்றிய கட்டார், முதல் முறையாக, 2014-இல் ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கர்னால் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

  தற்போது, அந்த மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai