Enable Javscript for better performance
தில்லியில் தற்கொலைத் தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் சதி: உளவுத் துறை எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் தற்கொலைத் தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் சதி: உளவுத் துறை எச்சரிக்கை

    By dn  |   Published on : 05th April 2015 02:44 AM  |   அ+அ அ-   |    |  

    தலைநகர் தில்லியில் தற்கொலைப்படைத் தாக்குதலில் ஈடுபட ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத இயக்கம் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதையடுத்து, தலைநகரில் பாதுகாப்பை பலப்படுத்தவும், முக்கியப் பிரமுகர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பை அதிகரிக்கும்படியும் மத்திய துணை ராணுவப் படைகளுக்கும், தில்லி காவல் துறைக்கும் மத்திய உள்துறை துறை உத்தரவிட்டுள்ளது.

    இந்த ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் 2001-இல் நாடாளுமன்றத்தின் பிரதான வாயிலுக்குள் காரில் ஊடுருவி நாடாளுமன்ற வெளிப்புற வளாகத்தில் தாக்குதல் நடத்தியவர்கள்.

    இதுகுறித்து மத்திய உளவுத் துறை உயரதிகாரி கூறியதாவது: காஷ்மீரில் ஹர்கத் உல் முஜாகிதீன் என்ற பயங்கரவாத இயக்கத்தில் இருந்து பிரிந்து ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத இயக்கத்தை மௌலானா மசூத் அசார் தோற்றுவித்தார்.

    1999-இல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானின் காந்தகாருக்கு கடத்திச் சென்றனர். அதில் உள்ள பயணிகளை விடுவிக்க இந்தியாவில் சிறை வைக்கப்பட்டிருந்த கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் பயங்கரவாதிகள் நிபந்தனை விதித்தனர். அவ்வாறு விடுவிக்கப்பட்ட கைதிகளின் தலைவர்தான் இந்த மௌலானா மசூத் அசார். இவரது கட்டளைப்படியே 2001-இல் பயங்கரவாதிகள் இந்திய நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தும் நாசவேலையில் ஈடுபட்டனர்.

    இந்த இயக்கத்துக்கு 2002-இல் பாகிஸ்தானும் தடை விதித்தது. அதன் பிறகு கதம் உல் இஸ்லாம் என்ற பெயரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். இந்த இயக்கத்தினரின் செயல்பாடுகளுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் உதவி வருகின்றனர்.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் வெள்ள நிவாரணப் பணிகளில் பாதுகாப்புப் படையினர், மத்திய துணை ராணுவப் படையினர், ஜம்மு - காஷ்மீர் காவல் துறையினர் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இந்தியாவுக்குள் ஊடுருவ பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல், தாஹ்ரீக் இ ஜிகாத், அல் பதார், தனீம் போன்ற பயங்கரவாத இயக்கத்தினர் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே மலைப் பகுதிகளில் தயார் நிலையில் இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

    இதில் தற்கொலைப்படை உள்ளிட்ட மிகவும் கொடூரமான தாக்குதல்களில் பயிற்சி பெற்றுள்ள ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தினர் தில்லிக்குள் ஊடுருவி, முக்கியத் தலைவர்களைக் கொல்லும் நோக்கில் தற்கொலைப்படைத் தாக்குதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதற்குச் சதித் தீட்டம் தீட்டி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

    தாஹ்ரிக்-இ-ஜிகாத் இயக்கத்தினர் காஷ்மீரின் ரஜௌரி, பூஞ்ச் போன்ற பகுதிகளில் உள்ள பாதுகாப்பு தளவாடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. பாகிஸ்தான் கட்டுப்பாட்டுப் பகுதியின் முஜாஹித் சோதனைச் சாவடி அருகே லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 50 பேர் அதன் தலைவர் முகமது ஹுசைன் தலைமையில் காஷ்மீருக்குள் ஊடுருவக் காத்திருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

    எனவே, தில்லியிலும் மற்ற மாநிலங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும்படி மத்திய உள்துறையை கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார் அந்த உயரதிகாரி. மேற்கண்ட மத்திய உளவுத் துறை எச்சரிக்கைக்கு முன்னதாகத்தான் தில்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்டோரின் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க மத்திய உள்துறை உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில், உளவுத் துறை எச்சரிக்கைக்குப் பிறகு மீண்டும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளும்படி மத்திய, மாநில காவல் துறைகள் கேட்டுக் கொண்டுள்ளப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp