Enable Javscript for better performance
ஆந்திர சம்பவம்: மறு பிரேத பரிசோதனைக்கு உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழர்கள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், சசிகுமார் என்பவரின் உடலை மறுபரிசோதனை செய்யுமாறு ஆந்திர அரசுக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம், வியாழக்கிழமை உத்தரவிட்டது.

    சசிகுமாரின் மனைவி முனியம்மாள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கல்யாண் ஜோதி சென்குப்தா, பி.வி.சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தது.

    சசிகுமார் உள்ளிட்ட 6 பேரின் உடல்களை மறு பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அந்த நடவடிக்கைகளை விடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் முனியம்மாள் தரப்பு வழக்குரைஞர் கே.பாலு கோரிக்கை விடுத்திருந்தார். மற்ற 5 பேரின் உறவினர்கள், வழக்குரைஞர்கள் என யாரும் நீதிமன்றத்துக்கு வராததை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், அவர்களின் உடலை மறுபரிசோதனை செய்வதற்கு உத்தரவிட முடியாது எனத் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக, நீதிபதிகள் தங்கள் உத்தரவில் மேலும் கூறியதாவது: சசிகுமாரின் உடலை, ஆந்திரத்தின் நிஜாம் அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்கள் குழு, மறு பரிசோதனை செய்ய வேண்டும். இந்தப் பரிசோதனை சென்னையில் நடத்தப்பட வேண்டும்.

    எனவே, சென்னையில் மருத்துவர் குழுவுக்கு உரிய பாதுகாப்பையும், அமைதியான சூழலையும் தமிழக அரசின் தலைமைச் செயலளார் உறுதி செய்ய வேண்டும்.

    அந்த மறு பிரேத பரிசோதனை அறிக்கையை, ரகசிய உறையில் வைத்து, வரும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆறு பேரின் உடல்களும் திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

    இதனிடையே, சுட்டுக் கொல்லப்பட்ட 20 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆந்திர அரசு வியாழக்கிழமை தாக்கல் செய்யததால், அந்த அறிக்கையை வரும் திங்கள்கிழமை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆந்திர மாநிலம், சேஷாசலம் வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர், கடந்த 7ஆம் தேதி போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இந்தச் சம்பவம் தொடர்பாக, ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் முனியம்மாள் தாக்கல் செய்திருந்த மனுவில், இது, சிறப்பு அதிரடிப் படை (எஸ்.டி.எஃப்) போலீஸார் நடத்திய திட்டமிட்ட படுகொலை' என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, சிறப்பு அதிரடிப் படை போலீஸார் மீது ஆந்திர போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai