Enable Javscript for better performance
ஆந்திர துப்பாக்கிச்சூடு சம்பவத்தை எஸ்ஐடி விசாரிக்க உத்தரவிட வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    ஆந்திர துப்பாக்கிச்சூடு சம்பவத்தை எஸ்ஐடி விசாரிக்க உத்தரவிட வேண்டும்

    By dn  |   Published on : 17th April 2015 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    thol_thirumalavan

    ஆந்திரத்தின் சேஷாசலம் வனப் பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை அந்த மாநில அதிரடிப்படையினர் சுட்டுக் கொன்ற சம்பவம் உள்பட 2011ஆம் ஆண்டு முதல் அங்கு நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இதுதொடர்பாக அவரது சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ராம்சங்கர் புதன்கிழமை தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

    தமிழகத்தில் இருந்து கட்டட வேலை, தச்சு, கூலி வேலைகளுக்கு ஏராளமான தொழிலாளர்கள் ஆந்திரத்தின் சித்தூர், கடப்பா, நெல்லூர், கர்னூல் உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்கின்றனர். அவர்களில் சிலரை செம்மரக் கட்டைகளை கடத்த முயன்றவர்கள் எனக் கூறி ஆந்திர காவல் துறையினர் அண்மையில் சுட்டுக் கொன்றுள்ளனர். ஆனால், செம்மரக் கடத்தலைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆந்திர காவல் துறையின் அதிரடிப்படையினர், துப்பாக்கிச்சூடு (தற்காப்புக்காக நடத்தப்படும் என்கவுன்ட்டர் தாக்குதல்) சம்பவங்களின் போது உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் வகுத்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் செயல்பட்டுள்ளனர்.

    கடந்த 7-ஆம் தேதி நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தமிழர்கள் 20 பேரை ஆந்திர மாநில அதிரடிப்படையினர் சுட்டுக் கொன்றனர். ஆனால், அச்சம்பவம் தொடர்பாக காவல் துறை, வனத் துறை ஆகியவை வெளியிடும் தகவலுக்கும், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு தப்பி வந்தவர்கள் வெளியிடும் தகவலுக்கும் முரண்பாடு உள்ளது.

    எனவே, 2011-ஆம் ஆண்டு முதல் ஆந்திர வனப் பகுதியில் குறிப்பாக சேஷாசலம் வனத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறித்து ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ராகவனின் வழிகாட்டுதலுடன் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும். 2011-க்குப் பிறகு நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், அதில் உயிரிழந்தவர்கள், கைதானவர்கள், அவை தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் என்ன என்பதைத் தெரிவிக்கும்படி சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

    செம்மரக் கடத்தல் கும்பலால் சுரண்டப்படும் வளங்களைத் தடுக்கும் வகையில், இரு மாநில எல்லைப் பகுதிகளில் கூட்டு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக் குழுவை அமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உச்ச நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai