Enable Javscript for better performance
உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு- Dinamani

சுடச்சுட

    

    மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கங்கலே மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, 3 பேர் கொண்ட குழுவை மாநிலங்களவைத் தலைவர் ஹமீத் அன்சாரி அமைத்தார்.

    இதுகுறித்து மாநிலங்களவை சார்பாக, வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    குழுவின் தலைவராக உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் இருப்பார்.

    குழுவின் பிற உறுப்பினர்களாக, கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூரும், சட்ட நிபுணர் கே.கே.வேணுகோபாலும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    குவாலியரைச் சேர்ந்த பெண் நீதிபதி ஒருவரை, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி கங்கலே பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

    இதனைத் தொடர்ந்து நீதிபதி கங்கலேவை பதவியிலிருந்து நீக்குவதற்காக, திக்விஜய் சிங் (காங்கிரஸ்), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), ஜெயா பச்சன் (சமாஜவாதிக் கட்சி) உள்ளிட்ட 58 எம்.பி.க்கள், கடந்த மாதம் மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டு வந்தனர்.

    தீர்மானத்தை ஏற்றுக் கொண்ட மாநிலங்களவைத் தலைவர் ஹமீத் அன்சாரி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்துவுக்கு எழுதிய கடிதத்தில், விசாரணைக் குழுவில் இடம்பெறுவதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரையும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவரையும் பரிந்துரை செய்யும்படி கோரியிருந்தார்.

    அதன் அடிப்படையில், இப்போது குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தக் குழுவானது, நீதிபதி கங்கலே மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரித்து, மாநிலங்களவைத் தலைவரிடம் அறிக்கையை அளிக்கும்.

    பின்னர், அந்த அறிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்படும்.

    அரசமைப்புச் சட்டத்தின்படி, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதியை பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்படும்பட்சத்தில், குடியரசுத் தலைவரால் அவர் நீக்கப்படுவார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai