Enable Javscript for better performance
கனடாவில் மோடியின் பேச்சு: காங்கிரஸ் கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    கனடாவில் இந்தியா குறித்து தரக் குறைவாக பேசியதாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா, தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

    அன்னிய மண்ணில், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளிலும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்து மலிவானதாக இருந்தது. அவர் மக்களவைத் தேர்தல் பிரசார மனநிலையிலேயே நீடிப்பதை அது காட்டுகிறது.

    தனக்கு முன் ஆட்சியில் இருந்தவர்களையும் (ஐக்கிய முற்போக்குக் கூட்டணி), இப்போதைய எதிர்க்கட்சியையும் (காங்கிரஸ்) களங்கப்படுத்தும் வகையில் அன்னிய மண்ணில் அவர் பேசுகிறார். இந்தியாவின் வரலாற்றிலேயே எந்தப் பிரதமரும் இவ்வாறு செய்ததில்லை.

    தான் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இந்தியா என்பது ஊழல்கள், முறைகேடுகளுக்காக மட்டுமே அறியப்பட்டது என்பது போன்ற தோற்றத்தை மோடி ஏற்படுத்தியுள்ளார். இதன்மூலம் பிரதமர் பதவியின் கௌரவத்தை அவர் குறைத்துவிட்டார்.

    தன்னிடம் முந்தைய ஆட்சியாளர்களால், வலுவான பொருளாதாரம் ஒப்படைக்கப்பட்டது என்பதை மோடிக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் கீழ் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நான்கு மடங்காக அதிகரித்தது.

    உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலம் முழுவதும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மிகவும் விரும்பிய நாடாக இந்தியா இருந்தது.

    உலகம் இப்போதுதான் முதல் முறையாக இந்தியாவை அங்கீகரிக்கிறது என்று மோடி நினைத்தால், அவருக்கு தவறான தகவலை அளித்துள்ளார்கள் என்றோ, தவறான நம்பிக்கையை அவர் கொண்டுள்ளார் என்றோ அர்த்தம்.

    இத்தகையை கருத்துகளின் மூலம் அவர் இந்திய மக்களின் சாதனைகளை மறுக்கிறார். இந்த நாட்டை உருவாக்கியவர்களை அவர் அவமதித்துள்ளார்.

    மோடி அரசு ஆட்சிக்கு வந்து 10 மாதங்களாகின்றன. மக்களுக்குத் தாம் அளித்த மிகப்பெரிய வாக்குறுதிகள் மற்றும் கனவுகள் குறித்து அவர் விளக்கமளிக்க இதுவே உரிய நேரமாகும் என்றார் ஆனந்த் சர்மா.

    "மோடியின் பேச்சு அவதூறானது': இதனிடையே, மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜா ஆகியோரும் வலைதளப் பதிவுகள் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளனர். திக்விஜய் சிங் தனது பதிவில், "ஒரு நாட்டின் தலைவர் வெளிநாடு செல்லும்போது அவர் ஒட்டுமொத்த நாட்டின் பிரதிநிதியாகத்தான் செல்கிறார். ஆனால், மோடியின் பேச்சோ பிளவுபடுத்தும் வகையிலும், அவதூறாகவும் உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

    சஞ்சய் ஜா தனது வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

    தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக அன்னிய மண்ணில் வருந்தத்தக்க வகையில், மோசமான விமர்சனங்களை முன்வைப்பதன் மூலம் உலக அரங்கில் இந்தியாவை மற்றவர்கள் எள்ளி நகையாடும் விஷயமாக மோடி மாற்றியுள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai