Enable Javscript for better performance
நாடு திரும்பினார் ராகுல் காந்தி- Dinamani

சுடச்சுட

    
    ragul

    கட்சிப் பணியிலிருந்து ஓய்வில் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, 56 நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை நாடு திரும்பினார்.

    தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து "தாய் ஏர்வேஸ்' விமானம் மூலமாக தில்லி விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை பிற்பகல் 11.15 மணிக்கு ராகுல் காந்தி வந்தடைந்தார்.

    இதனைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அங்கிருந்து தில்லியில் உள்ள துக்ளக் சாலையில் உள்ள தனது இல்லத்துக்கு காரில் ராகுல் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அங்கு அவரது தாயார் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் இருந்தனர்.

    முன்னதாக, அவரது வீட்டின் முன்பு கூடியிருந்த செய்தியாளர்களிடம் பேச ராகுல் முன்வரவில்லை.

    தனது இல்லத்தில் இரண்டு மணிநேரம் செலவிட்ட ராகுல் காந்தி, ஜன்பத் சாலையில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்துக்குச் சென்றார்.

    இந்நிலையில், அவர் 56 நாள்கள் எங்கு இருந்தார் என்பது குறித்த விஷயம் மர்மமாகவே உள்ளது.

    கட்சியினர் கொண்டாட்டம்: ராகுல் காந்தி திரும்பிய தகவலை அறிந்த காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் அவரது இல்லம் முன்பு குவியத் தொடங்கினர். பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறியதாவது:

    விடுப்பு முடிந்து ராகுல் காந்தி திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது. கட்சியின் வளர்ச்சிக்காக இனி அவர் உற்சாகமாக உழைப்பார். சிறந்த தலைமைப் பண்புடன் உறுதிப்பாட்டுடன் அவர் செயல்படுவார் என்றார் ஆனந்த் சர்மா.

    விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்பு: மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பல்வேறு விவசாய அமைப்புகள் சார்பில், வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19) போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்பார் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக விவசாய அமைப்புகளின் உயர்நிலைக் குழுவிடம் வெள்ளிக்கிழமை (ஏப்.17) ராகுல் காந்தி ஆலோசனை நடத்துவார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் போராட்டத்துக்குப் பின்னர், தனது சொந்தத் தொகுதியான அமேதிக்கு ராகுல் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முதல் நாளான பிப்ரவரி 23-ஆம் தேதி ராகுல் காந்தி திடீரென ஓய்வெடுக்கச் சென்றார். அவர் எங்கு சென்றார், எப்போது திரும்புவார் உள்பட எந்தத் தகவலையும் காங்கிரஸ் கட்சி வெளியிடவில்லை.

    இதனால் பல்வேறு கட்சியினரின் பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு ராகுல் காந்தி இலக்கானார்.

    மேலும், அவரது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களே ராகுல் குறித்த எதிர்மறை விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai