Enable Javscript for better performance
பிரிவினைவாதிகள் மீது கடும் நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    
    rajnath_singh

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் முஃப்தி முகமது சயீதிடம், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

    முஃப்தியிடம் வியாழக்கிழமை தொலைபேசியில் பேசிய ராஜ்நாத் சிங், மேற்கண்ட கருத்தை வலியுறுத்தினார்.

    பின்னர், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் ராஜ்நாத் சிங் கூறியதாவது:

    இந்திய மண்ணில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்படுவதை மத்திய அரசு பொறுத்துக் கொள்ளாது.

    தேசப் பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தேசப் பாதுகாப்பை சீர்குலைக்கும் வகையில் அரசியல் செய்யக் கூடாது என்றார் அவர்.

    பாஜக கண்டனம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக பிரிவினைவாதிகள் கோஷமிட்ட விவகாரத்தில் ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ராம் மாதவ் கூறியதாவது:

    ஜம்மு-காஷ்மீர் கூட்டணி அரசில் பாஜக இணைந்தது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிடப்படுவதை வேடிக்கைப் பார்க்க அல்ல. இதை எங்கள் கட்சியைச் சேர்ந்தவரான துணை முதல்வர் நிர்மல் சிங்கும் உறுதிபடக் கூறியுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாது என்பதை உறுதி செய்ய வேண்டும். இம்மாதிரியான சம்பவங்கள் எப்போது நடைபெற்றாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் வளர்ச்சியடைய வேண்டுமானால், பாகிஸ்தானுக்கு ஆதரவான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai